தமிழகத்தின் முக்கியமான அடையாளம், எம்ஜிஆர் ஒரு சகாப்தம்.. சினிமா, அரசியல் இரண்டிலும் வெற்றி கண்ட ஒரே தலைவன்

வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பற்றிய கட்டுரைகளை தொடர்ந்து கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் காணவிருக்கும் மனிதர் தமிழகத்தின் முக்கியமான அடையாளம். சினிமா, அரசியல் என்று இரு துறைகளிலும் தனது முத்திரையை ஆழமாகப் பதித்தவர். புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் என்று பல அடைமொழிகளால் அறியப்படும் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களைப் பற்றி.

இந்தக்கட்டுரை எம் ஜி ஆரின் வாழ்க்கை வரலாறு போன்று இல்லாமல் அவரைப் பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை அலசி ஆராய்ந்து தொகுக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். எம்ஜிஆர் அவர்கள் பல துறைகளில் வித்தகராக, சினிமா மீதும் அரசியல் மீதும் அதிக நாட்டம் கொண்டவராகவும் விளங்கினார். முன்னாள் முதல்வர், திமுக தலைவர், பேரறிஞர் அண்ணா அவர்களின் தீவிர விசுவாசியான எம்ஜிஆர் அவர்கள், அவரது படத்தை தனது கட்சிக் கொடியில் தாங்கும் அளவிற்கு அவருடன் இணக்கமாக பேரன்புடன் இருந்தவர்.

எம்ஜிஆர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பார்க்கும் போது அவரது ஆரம்ப காலம் முதல் 40 வயது வரை அவர் அனுபவிக்காத கஷ்டங்களை இல்லை என்று கூறலாம். சிறு வயதில் படிக்க முடியாத ஏழ்மையால் தனது அண்ணன் சக்கரபாணி உடன் இணைந்து நாடகங்களில் நடித்து வந்தார். சிறுவயது முதலே நடிப்பில் படு சுட்டியாக வும் எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் அவரது குணாதிசயமும் அவருக்கு பல பேரின் கவனத்தைப் பெற்று தந்தது. அந்த வகையில் அவர் சினிமாத் துறையில் நுழைந்து இருந்தாலும் அவரது வளர்ச்சி என்பது அவ்வளவு எளிதில் அடைந்துவிடவில்லை.

அவர் நடித்த மலைக்கள்ளன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும்வரை எம்ஜிஆர் அவர்களின் சினிமா வாழ்க்கை அவ்வளவு பிரகாசமாக இருந்திருக்கவில்லை. அதேபோல குலேபகாவலி திரைப்படம் எம்ஜிஆர் அவர்களுக்கு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கித் தந்தது. இந்த காலத்தில் தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களாக இருந்தவர்கள் தியாகராஜ பாகவதரும், டி ஆர் மகாலிங்கம் அவர்களும். வயது மூப்பின் காரணமாக மற்றும் சில காரணங்களுக்காக இவர்கள் இருவரும் தொடர்ந்து முன்னிலை வகிக்க முடியாத நேரத்தில் எம்ஜிஆர் தனக்கான கோட்டையை கட்ட தொடங்கியிருந்தார்.

எம்ஜிஆர் ஒருபோதும் தன்னை ஒரு சினிமா பிரபலம் என்று அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை இறுதிவரை முதலாளி என்று பாசத்துடன் அழைத்து வந்தார். அது அவர் சட்டமன்ற உறுப்பினராக ஆன பின்பும் தொடர்ந்து என்பது ஊர் அறிந்த செய்தி. தன்னிடம் பகைமை பாராட்டி அவர்களையும் கூட அன்பு செய்து அணைக்கவே பார்த்தார் என்பதுதான் உண்மை. அந்த வகையில் தன்னுடன் அடிக்கடி எதிராக செயல்பட்டு வந்த எம்.ஆர்.ராதா மற்றும் சந்திரபாபு ஆகியோருடனும் அவர் நட்பாக பழகி வந்தார்.

சொல்லப்போனால் துப்பாக்கிச்சூடு நிகழ்வுக்கு பின்னரும் ராதா மீது எந்த ஒரு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் அவர் காட்டாமல் இருந்தார். அதேபோல நகைச்சுவை நடிகர் சந்திரபாபு அவர்களுக்கும் இறுதி காலத்தில் பணத்தைத் தொலைத்து நின்ற போது தனது படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். பறக்கும் பாவை திரைப்படத்தில் நடித்த பின்னர் சந்திரபாபு அவர்கள் எம்ஜிஆரின் உண்மையான இந்த குணத்தை நான் அறிந்து கொண்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் திரைப்படங்களில் எப்பொழுதும் தனது கதாபாத்திரம் குறித்து கவனமாக இருந்தார். பல கோடி தமிழக ரசிகர்கள் தன்னை முன்மாதிரியாக கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அதனால் எப்பொழுதும் தனது கதாபாத்திரம் அந்த மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அவர்களது தொழிலை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதை அவ்வப்போது தனது கதாபாத்திரங்களை உருவாக்கி வந்தார். அந்தக் காரணத்தால்தான் எம்ஜிஆர் அவர்களால் எளிய மக்களுடன் எளிதாக மனதளவில் இணைய முடிந்தது. ஒரு சாதாரண தொழிலாளியாக, மீனவனாக, ரிக்க்ஷா ஓட்டுபவராக என்று எளிய கதாபாத்திரங்கள் பலவற்றில் நடித்தார். அவர்கள் படும் துன்பங்களை தனது பாடல்களின் மூலமாக திரைப்படங்களில் இடம்பெறச் செய்து அவர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

எம்ஜிஆர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி திரைப்படங்களும் சரி குடிப்பது போன்ற அல்லது புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டார். காரணம் அவரை கண்மூடித்தனமாக பின்பற்றும் பல ரசிகர்கள் இதனை பார்த்து தாங்களும் அந்த வழியில் சென்று விடக்கூடும் என்ற பயம் தான். எத்தனையோ அவரது ரசிகர்கள் எம்ஜிஆர் குடிப்பதில்லை புகைப்பதில்லை என்ற காரணத்திற்காக அவர்களும் அந்த பழக்கங்களை கைவிட்டதாக கூறியிருக்கிறார்கள். அந்தவகையில் எம்ஜிஆர் எப்போதுமே மக்களின் தலைவனாக வாழ்ந்தார் என்பது மிகையல்ல. அந்த காரணத்தினாலேயே இறந்தபின்னும் 35 வருடங்களாக எம்ஜிஆரின் புகழ் நிலைத்திருக்கிறது.

எம்ஜியார் அவர்களைப் பற்றி நிறைய சின்ன சின்ன கதைகள் உண்டு. அவற்றை அவருடன் பழகிய பலர் ஆங்காங்கே பதிவு செய்து வைத்துள்ளது இன்று நமக்கு அவரைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. அப்படி ஒரு நிகழ்வாக நடந்த இந்த உண்மைச் சம்பவம் அவரது எளிய மனப்பாங்கு நமக்கு நன்கு விளங்க வைக்கும். எம்ஜிஆர் அவர்களின் ராமாவரம் தோட்டத்தில் எப்போதும் பெரும் கூட்டம் இருக்கும். எம்ஜிஆர் முதல்வர் ஆன பின்பு அவர் சட்டசபைக்கு செல்லும்போதும் திரும்பி வரும்போதும் அவரை காண வேண்டி பல கிராமங்களிலிருந்தும் மக்கள் கூட்டமாக வந்து அவர் வீட்டு வாசலில் இருப்பது வாடிக்கை. அப்படி பலர் தொடர்ந்து வருவது எம்ஜிஆருக்கும் நன்கு தெரியும்.

அவர்களில் பலரது முகம் கூட அவருக்கு மனப்பாடம். அப்படி எப்போதும் தொடர்ந்து வரும் ஒரு ரசிகரின் கடிதம் ஒன்று அவருக்கு கிடைத்தது. அது என்னவென்று பிரித்து பார்த்த போது அது கடிதம் அல்ல அது ஒரு திருமண அழைப்பிதழ் என்பதை அவர் கண்டார். அதில் எம்ஜிஆர் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவ்வளவு பெரிய மனிதர் தனது வீட்டு திருமணத்திற்கு வருவார் என்று ஒருபோதும் அந்த தந்தை நினைத்திருக்க மாட்டார். ஆனாலும் அவருக்கு அந்தத் திருமணத்தை பற்றி எம்ஜியாரிடம் கூற வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது.

அந்தப் பத்திரிகையை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டார் எம்ஜிஆர். சரியான திருமண தேதி அன்று குறித்த நேரத்தில் அந்த தொண்டனின் வீட்டு வாசலில் அவரது கார் நின்றது. திருமண ஏற்பாட்டாளர்கள் மிரண்டு போனார்கள். காரிலிருந்து பாசத்துடன் தலைவன் இறங்குவதே பார்த்த அவர்களுக்கு முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. மணமக்களுக்கு வாழ்த்து கூறி விட்டு அவர்களுடன் உணவு அருந்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் முதல்வர் என்றால் அவரைப் போல் தலைவர் உண்டோ?

எம்ஜியார் அவர்களுக்கு சாலைப் பயணங்கள் மிகவும் பிடிக்கும். கட்சி தேவைக்காகவும் முதல்வர் ஆன பின்பும் பல நிகழ்வுகளுக்காக அவர் தமிழகம் முழுவதும் காரில் பயணித்தார். அப்போது அவருக்காக குழுமியிருக்கும் கூட்டத்துடன் சகஜமாக பழகுவார். அவருக்குத் தோன்றும் இடங்களில் எல்லாம் காரை நிறுத்தச் சொல்லி அந்த மக்களிடம் தனது அன்பை வெளிப் படுத்துவார். அப்படி வெளிவந்திருக்கும் புகைப்படங்கள் வெறும் 10 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று அவரது ஆஸ்தான புகைப்படக் கலைஞரான ராமகிருஷ்ணன் அவர்கள் பதிவு செய்து இருக்கிறார்.

எம்ஜிஆர் அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரான காமராஜர் மீது மிகவும் மரியாதை உண்டு. அரசியல் மேடைகளில் ஒரு போதும் அவரை தாழ்த்திப் பேசுவதை அவர் அனுமதிக்கவில்லை. அவர் தொடங்கி வைத்த அனைத்து திட்டங்களையும் அப்படியே தொடர்ந்தார். காமராசர் அவர்கள் தொடங்கி வைத்த மதிய உணவு திட்டத்தை மேலும் சிறப்பாக்கி சத்துணவு திட்டமாக மாற்றி அமைத்தார் எம்ஜிஆர். ஆனபோதும் தொடர்ந்து அந்த திட்டத்தை தொடங்கி வைத்தவர் என்ற முறையில் காமராசரை மட்டுமே குறிப்பிட்டிருந்தார் என்பது முற்றிலும் உண்மை.

என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் புகழின் உச்சியில் இருந்தபோது எம்ஜிஆர் அவர்களுடன் சேர்ந்து ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தார். அந்த படத்தின் போது எம்ஜிஆர் அவர்கள் ஓரளவுக்கு வளர்ந்துவிட்ட நடிகராக இருந்தார். அவர் அணிந்திருந்த செருப்பு அறுந்து போகவே அதனை தூக்கி எறிய முற்பட்டார் எம்ஜிஆர். ஆனால் என்.எஸ்.கே அவர்கள் அவரிடம் நமது நிலைமை உயரும் போது பணிவு வேண்டும் என்றும் அந்த செருப்பை தைத்து உபயோகப்படுத்தினால் காசு மிச்சம் தான் என்று அறிவுரை கூறினார். அன்று முதல் எம்ஜிஆர் அவர்கள் அந்த அறிவுரையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். அரசு கொடுக்கும் சலுகைகளை தவிர அவர் எந்த ஒரு தேவையில்லாத செலவையும் செய்யாத மனிதராகவே வாழ்ந்து வந்தார்.

சினிமாவில் எப்பொழுதும் எம்ஜிஆரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. அதே போல அரசியலிலும் இன்னொரு எம்ஜிஆர் போன்ற மனிதர் வரப்போவது இல்லை. மக்களின் மனதில் எம்ஜிஆர் ஒரு போதும் நீங்க போவதில்லை. எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவர் இல்லை, கோடியில் ஒருவர். அவர் ஒரு சகாப்தம்!

Next Story

- Advertisement -