சினிமாவில் இருந்து பல பிரபலங்கள் அரசியலில் கால் பதித்துள்ளனர். தற்போது உள்ள அரசியல் வாரிசுகளும் சினிமா மூலம் பிரபலமாகி பின்பு அரசியலில் நுழைகிறார்கள். அப்போதைய காலகட்டத்தில் திரைப்படங்கள் மூலம் எம்ஜிஆரை மக்கள் மனதில் கொண்டு சென்றதில் பெரும்பங்கு ஒரு பாடல் ஆசிரியருக்கு உண்டு.
இந்த பாடலாசிரியர் தன் பாடல்களில் பொதுவுடமை கருத்துக்கள் மூலம் அடித்தட்டு மக்கள் முதல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், என்னுடைய முதல் அமைச்சர் நாற்காலியில் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது.
ஆனால் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என குறிப்பிட்டார். ஏனென்றால் பாமரமக்களின் பாடல்களை எழுதுவதில் வல்லவரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எம்ஜிஆர் படங்களில் நிறைய பாடல்கள் எழுதி உள்ளார்.
1950 பாடலாசிரியர்களில் முதன்மையாக இருந்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார். எம்ஜிஆரின் படங்களில் அரசியல் ரீதியான கருத்துக்களையும், வரிகளையும் அடித்தளமிட்டு கொடுத்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இதுவே எம்ஜிஆர் அரசியலுக்கு செல்ல முக்கியமான காரணமாக இருந்தது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரிகளில் எம்ஜிஆரின் தத்துவ பாடல்கள் வெளியானது. எம்ஜிஆருக்கு நாடோடி மன்னன், அரசிளங்குமரி, கலை அரசி, சக்கரவர்த்தி திருமகள், மகாதேவி, விக்கிரமாதித்தன் போன்ற பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார் கல்யாணசுந்தரம்.
மிகக்குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது 29 ஆவது வயதிலேயே இந்த மண்ணுலகை விட்டு சென்றார். அப்போது ஒரு கண்ணை இழந்தது போல எம்ஜிஆர் தவித்தார். கவிஞர் கண்ணதாசன், கல்யாணசுந்தரம் இறப்பிற்கு பிறகு பல நாள் பாடல்கள் எழுதாமல் துக்கத்திலேயே இருந்தார். காலம் உள்ளவரை இந்தக் கவிஞனின் வரிகள் வாழும்.