மெர்சல் தலைப்புக்கு இன்று முடிவு! புதிதாக முளைத்த அடுத்த பிரச்சனை..

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’. இந்தப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ’தெறி’ படத்துக்குப் பிறகு, விஜய் – அட்லியின் கூட்டணி இணைவதால் `மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது வருகிறது.

’மெர்சல்’, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படம் என்பதால் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் மிகப் பிரமாண்டமாக நடத்தினார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெளியிடப்பட்ட போஸ்டர்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், படத்தின் டீசருக்காகப் பலரும் காத்திருந்தனர்.  மெர்சல் படத்தின் டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டு பல சாதனைகளை படைத்தது.

விஜய் நடித்த ‘மெர்சல்’ ‘படம் ஆளப்போறான் தமிழன்’ என்ற பெயரில் மாற்றப்படவுள்ளதாக செய்திகள் பரவியுள்ளன. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘மெர்சல்’ படத்தின் தலைப்பு தற்போது மாற்றப்படலாம் என தெரிகிறது. ‘மெர்சல்’ படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார். 2014ம் ஆண்டு ‘ மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை பதிவு செய்திருந்தேன். ஆனால், ‘மெர்சல்’ என்ற தலைப்பை விஜய் படத்திற்கு வைத்துள்ளனர். எனவே, அந்த தலைப்பில் விளம்பரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் மனுவை விசாரித்த நீதிபதி ‘மெர்சல்’ என்ற தலைப்பை வருகிற அக்டோபர் 3ம் தேதி வரை விளம்பரத்திற்காக பயன்படுத்தக்கூடாது என தடை விதித்தார். மேலும், இதுகுறித்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் தரவேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ‘மெர்சல்’ தலைப்பிற்கு நீதிமன்றம் தடை விதித்தால், ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற பாடல் வரியையே தலைப்பாக வைத்துவிடலாம் எனப் படக்குழு ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இன்று (அக்.3) மெர்சல் தலைப்பு மீதான வழக்கிற்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், புதிதாக ஒரு பிரச்சனை முளைத்துள்ளது.

தமிழக அரசின் இரட்டை வரிவிதிப்பு முறையை எதிர்த்து இன்று(அக்.3) முதல் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் காலவரையின்றி திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக மல்டிப்ளக்ஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இரட்டை வரி விதிப்பு முறை திரும்ப பெரும் வரை இந்த போராட்டம் தொடரும் என தெரிகிறது. இதனால், கடந்த வெள்ளிகிழமை வெளியான படங்களின் வசூல் பாதிக்கப்படும் இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

போராட்டம் தொடரும் பட்சத்தில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களுக்கம் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. இந்நிலையில், மெர்சல் திரைப்படம் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகவுள்ளது. ஆனால், இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும், இதனால் தீபாவளிக்கு வெளியாகும் மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

Comments

comments