Tamil Cinema News | சினிமா செய்திகள்
அமெரிக்க விமான நிலையத்தில் நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி..
தெலுங்கு நடிகைகள் பலரும் அமெரிக்காவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய அமெரிக்க போலீஸ் நடிகைகளை வைத்து அமெரிக்காவில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக தெலுங்கு தயாரிப்பாளர் கிஷான் மற்றும் அவரது மனைவியை சிகாகோ போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பாலியல் தொழிலில் ஈடுபட்ட நடிகைகள் விவரம் என்னிடம் உள்ளது. பிரபல நடிகைகள், டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் அடக்கம். பாலியல் தொழிலில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை நான் வெளியிட்டால் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படும். பாலியல் தொழிலுக்காக என்னையும் அந்த தம்பதியினர் அமெரிக்காவுக்கு அழைத்தனர். நான் செல்லவில்லை என்று கூறி அதிரவைத்திருந்தார்.
தெலுங்கு படம் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக கனடா சென்றிருந்த நடிகை மெஹ்ரீன், படப்பிடிப்பின் இடைவெளியில் 3 நாட்கள் விடுமுறை கிடைக்கவே, அமெரிக்கா சென்று தனது பெற்றோரைச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார்.
இதற்காக கனடாவின் வான்கோவார் விமான நிலையத்துக்குச் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அவரைத் தடுத்து நிறுத்திய அமெரிக்க குடியேற்றத் துறை அமைச்சக அதிகாரிகள் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய மெஹ்ரீன், நான் தெலுங்கு நடிகை என்று கூறியவுடன், அமெரிக்கக் குடியேற்றத் துறை அதிகாரிகள் என்னிடம் 30 நிமிடத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
அமெரிக்காவுக்குச் செல்வதற்கான காரணம் குறித்தும் என்னிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். தெலுங்கு நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்ட விவகாரம் குறித்த தகவல் எனக்குத் தெரியுமா என்பது குறித்து கேள்வி கேட்டனர். எனக்குத் தெரியாது என்று நான் கூறியதை அடுத்து சிகாகோவில் போலீஸார் கைது செய்த விவகாரங்கள் குறித்து என்னிடம் விளக்கினர். இதில், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகைகளுக்குத் தொடர்பிருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். இதனால், அமெரிக்காவுக்கு வரும் தெலுங்கு நடிகைகளிடம் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவித்தனர். ஒரு சில நடிகைகளால் எல்லா நடிகைகளும் இவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.
தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்தவர் மெஹ்ரீன் பிரிசாடா. பஞ்சாபைச் சேர்ந்த மெஹ்ரின் தமிழ் படங்கள் தவிர்த்து தெலுங்கு பல படங்களில் நடித்து வருகிறார். ஆனந்த ஷங்கர் இயக்கிவரும் நோட்டா படத்திலும் அர்ஜூன் ரெட்டி ஹீரோ விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்து வருகிறார்.
