மாஸ்டர் படம் வெளியாவதற்கு முன்னர் பல்வேறு சர்ச்சைகளை கடந்து தான் வெளியானது. ஒரு பக்கம் 100 % அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்களை திடீரென 50% ஆக மாற்றியது, படம் ரிலீசுக்கு முந்தைய நாள் படத்திலிருந்து சில காட்சிகள் இணையத்தில் வெளியானது என பல்வேறு பிரச்சனைகள்.
அதுமட்டுமில்லாமல் ரசிகர்களையும் தாண்டி குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு மக்கள் வருவார்களா என்ற எதிர்பார்ப்பு என அனைத்தையும் மாஸ்டர் படம் நிறைவேற்றியதா? என்றால் நூறு சதவிகிதம் நிறைவேற்றியது என்று மார்தட்டி சொல்லிக்கொள்ளலாம் மாஸ்டர் படக்குழுவினர்.
அந்த அளவுக்கு மாஸ்டர் படம் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகமெங்கும் வசூல் ரீதியாகவும் தியேட்டர்களுக்கு வரும் மக்கள் ரீதியாகவும் பெரிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக அளவில் வசூல் செய்த படங்களில் முதல் இடத்தை மாஸ்டர் படம் பிடித்தது என உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்தி வரை அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பி வருகின்றனர்.
ஹிந்தியில் மட்டுமே விஜய்யின் மாஸ்டர் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் இதுதான் நேரடியாக ஹிந்தியில் டப் செய்து தியேட்டரில் வெளியான முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலுக்கு மோசமில்லை என்கிற அளவுக்கு மாஸ்டரின் நிலை அங்குள்ளது.
ஆனால் மற்ற மொழிகளில் வெறித்தனமாக வசூல் வேட்டையாடி உள்ளது என்று சொல்லலாம். தெலுங்கில் 5 நாட்களில் மட்டும் 21 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. கர்நாடகாவில் 15 கோடி, கேரளாவில் 10 கோடி என விமர்சகர்கள் தொடர்ந்து மாஸ்டர் வசூலை கூறி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டத்தட்ட 100 கோடியை தொட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக அளவில் மாஸ்டர் படம் 5 நாட்களில் 180 கோடிகளை தாண்டி விட்டதாம். அதுவும் உலகம் முழுவதும் வெறும் 50% பார்வையாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு மாஸ்டர் படம் 200 கோடியை நோக்கிச் சென்று கொண்டிருப்பது வேறு யாரும் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சாதனை தான் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
முன்னதாக பல முன்னணி நடிகர்கள் தங்களுடைய படங்கள் தியேட்டரில் வெளியானால் நஷ்டத்தை சந்தித்து விடுமோ என பயந்து OTT தளங்களில் வெளியிட்டதை பார்த்தோம். ஆனால் தற்போது பாலிவுட் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் அவர்களுடைய படங்களை தைரியமாக தியேட்டரில் வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளனர். அதற்கு காரணம் விஜய்யின் மாஸ்டர் தான் என்றால் மிகையாகாது.