மாஸ் ஹீரோ படங்கள் என்றாலே ஒரு அதிரடியான மாஸ் பாடல் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில், விஜய்யின் பெரும்பாலான படங்களில் மாஸ் பாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த பாடல்களில் அவர் அதிரடியான ஆட்டமாடி தியேட்டருக்கும் வரும் இளவட்ட ரசிகர்களை எழுந்து ஆட வைத்து வருகிறார். ஆரம்பத்தில் படத்துக்கு ஒரு பாடல் என்று இருந்தநிலையில், சமீபகாலமாக இரண்டு பாடல்களை கட்டாயப்படுத்தி விட்டார் விஜய்.

அதேபோல், முன்பெல்லாம் மாஸ் பாடல்களில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த அஜித் கூட என்னை அறிந்தால் படத்தில் அத்தாரு அத்தாரு உத்தாரு உத்தாரு -என்ற பாடலில் கலக்கல் ஆட்டம் போட்டவர், பின்னர் வேதாளம் படத்தில் ஆளுமா டோளுமா -என்ற பாடலில் லோக்கல் ஆட்டம் போட்டிருந்தார். அந்த பாடல் இளவட்ட ரசிகர்களின் பேவரிட் பாடலாகியிருக்கிறது.

அதனால், தெறி படத்திலும் அந்த ரேஞ்சுக்கு ஒரு பாடல் வேண்டும் என்று அப்பட இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் ஒரு அதிரடியான மாஸ் பாடலை ரெடி பண்ணியிருக்கிறார். அந்த ஒரு பாடலுக்காக சுமார் 25 டியூன்களை அவர் ரெடி பண்ணி கொடுத்தாராம். அதில் ஒன்றை விஜய் ஓகே செய்திருக்கிறார். விஜய்யின் ஓப்பனிங் பாடலான அந்த பாடல், ஜித்து ஜில்லாடி -என்று தொடங்குகிறதாம். இந்த பாடலில் இதுவரையில்லாத அளவுக்கு இறங்கி ஆடியிருக்கிறாராம் விஜய். அதனால் இந்த பாடல் தெறி பட ஆல்பத்தில் மாஸ் ஹிட்டாகும் என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.