கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மைக்கை பிடித்து ஏடாகூடமாக பேசியே பெயர் வாங்கும் மன்சூர் அலிகான். சில சமயங்களில் அது வெட்டிப் பேச்சாகவும் இருக்கும். பல சமயங்களில் வேஸ்ட் ஆசாமிகளை வெட்டித்தள்ளுகிற அளவுக்கு சிறப்பான பேச்சாகவும் இருக்கும்.

இது எந்த மாதிரியான பேச்சு என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த உறுதி கொள் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் அவர். வந்த இடத்தில்தான் இப்படியொரு பரபரப்பு பேச்சு.

சினிமாக்காரர்கள் தான் சினிமாவை அழிக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் பங்கு பெறுகிறார். அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டம் மாதிரி கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்களுக்கு அந்த டி.வி காரங்க ஏதோ படி அளக்கிறாங்க. அவங்க கஷ்டம் தீரட்டும் பரவாயில்லை.. ஆனால் கமல் மாதிரி சாதனை கலைஞர் இது மாதிரி நிகழ்ச்சி மூலம் சினிமாவை அழிக்க காரணமாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் மாலை காட்சி இரவு காட்சிக்கு தியேட்டருக்கு வருகிற கூட்டம் கட். அதே நிகழ்ச்சி மறு நாள் காலை ஒளிபரப்பாகிறது அதனால் காலை காட்சிகளும் கட். ஆக எல்லா காட்சிகளுமே அவுட்.

நாளை கமல் படம் வெளிவரும் போது அஜீத்தோ, விஜய்யோ இது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்தி அதனால் அவரது படத்தின் வசூல் பாதித்த என்னாகும்? இதை அவர் யோசிக்க வேண்டும் என்றார் மன்சூரு.

ட்ரம்ப் கேள்வி கேட்டால் கூட, நாம பதில் சொல்ற அளவுக்கு அந்தாளுக்கு தகுதியிருக்கா என்று யோசிக்கிற ஹீரோ கமல். மன்சூருக்கெல்லாமா பதில் சொல்லப் போறார்?