உலகமே ஒரு படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு பொதுமேடையில் “அந்தப்படம் நல்லாயில்ல. புடிக்கல” என்று ஒரு நடிகர், அதுவும் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் சொன்னால் எப்படியிருக்கும்? பாட்டு நல்லாவேயில்ல என்றும் அழுத்தி கமென்ட் அடித்தார். (கடந்த எலக்ஷனில் மன்சூரலிகான் விஷால் அணியில் நின்று செயற்குழு உறுப்பினராக பதவியும் பெற்றுவிட்டார்) அந்த பேச்சு அங்கிருந்த பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியதில் ஒன்றும் வியப்பில்லை.

இன்று பிரசாத்லேப் தியேட்டரில் ‘ஏண்டா தலையில எண்ணை வைக்கல’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. கனடாவை வாழ்விடமாக கொண்ட தயாரிப்பாளர்கள், சென்னையிலிருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹைனா உதவியுடன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். விக்னேஷ் கார்த்திக் இயக்க, சின்னத்திரை பிரபலம் அசார் ஹீரோவாக நடித்திருக்கிறார். சஞ்சிதா ஷெட்டி ஹீரோயின். இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் மன்சூரலிகான். இந்த நிகழ்ச்சியில்தான் தன் வாஸ்த்து கெட்ட வாயை வைத்துக் கொண்டு, பேஸ்த் அடிப்பது போல பேசிக் கொண்டிருந்தார் மன்சூரு. .

விழா மேடையில் யார் மைக்கில் பேசினாலும், மைக் அருகே உட்கார்ந்து கொண்டு குறுக்கே குறுக்கே கமென்ட் அடித்துக் கொண்டிருந்தார் இவர். கனடாவிலிருந்து இந்த விழாவுக்காகவே வந்திருந்த கோட் சூட் போட்ட கனவான்கள் இவரது செய்கையை அருவருப்போடும், ஆத்திரத்தோடும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அரங்கம் கொள்ளாமல் வந்திருந்த படக்குழுவினரும், அவர்களது உறவினர்களும் மன்சூருவின் சேஷ்டையை ரசித்துக் கொண்டிருந்தது வேறு விஷயம்!

மன்சூரின் பேச்சில் முக்கால்வாசி குப்பை என்றாலும், சிற்சில நல்ல விஷயங்களையும் பேசியது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். “இன்னைக்கு காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டு போன கதையா, எவ்வளவோ கோடிகளை கொட்டி படம் எடுக்கறது ஒருத்தர். அதை துளி கூட செலவில்லாம டவுன் லோட் படம் இன்னொரு கூட்டம் பார்க்குது. இப்படி பார்க்கறது தப்பு இல்லையா? பஸ்சுல டிக்கெட் விற்கும்போதே, இன்னைக்கு இந்தப்படம் ஒளிப்பரப்பாகும்னு சொல்லியே டிக்கெட் விற்கிறான். இனி எங்க பொருளை எப்படி அனுமதியில்லாம நீ போட்றீயோ, அதே மாதிரி உன்னோட பஸ்சை நாங்க அப்படியே ஓட்டிட்டு வந்துடப் போறோம். நடக்குதா இல்லையா பாரு. விஷால் தலைமையிலான அணி, இந்த திருட்டுத்தனத்தை ஒழிக்கதான் அதிரடியா பிளான் பண்ணிட்டு இருக்கோம்” என்றார் ஆவேசமாக!

இவ்வளவு எச்சரிக்கை தரும் விதத்தில் பேசிய மன்சூர், பாகுபலி 2 படத்தை பற்றி தவறாக பேசாமல் போயிருக்கலாம் அல்லவா? அது அவரது தனிப்பட்ட கருத்து என்றாலும், அவரும் நடிகர் என்பதால் பொதுமேடையில் பேசியது தவறு என்று விமர்சித்தபடியே கிளம்பியது கூட்டம்.

மன்சூருக்கெல்லாம் சொன்னால் புரிந்து கொள்கிற அளவுக்கா இருக்கிறது மேல் மாடி?