மன்னன் பட ரீமேக்.. மீண்டும் லாரன்ஸ்! ஆனா அங்கதான் சிக்கலே ஆரம்பிக்குது

ரஜினி, விஜயசாந்தி நடித்த மன்னன் படம் இப்போதும் டி.விகளில் அப்படம் ஓடினால் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்து விழுந்து விழுந்து ரசிக்கும் குடும்பங்கள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட மன்னன் படத்தை, எனக்கு உனக்கு என்று பங்கு போட ஆசைப்படுகிறார்கள் நம்ம ஹீரோக்கள். அதிலும் ரஜினியால் வளர்ந்து ரஜினி போல உயர்ந்த லாரன்சுக்கு அப்படத்தின் மீது கொள்ளை ஆசை.

மன்னன் இயக்குனர் பி.வாசுவிடம் சொல்லி, அப்படத்தின் ரீமேக்கை நீங்க பண்ணினா என் கால்ஷீட் எப்ப வேணும்னாலும் உண்டு என்று கூறிவிட்டார். அப்புறமென்ன? தமிழ், தெலுங்கு சினிமா மார்க்கெட்டில் லாரன்சின் வியாபாரம் நன்றாக இருக்கிறது.

மளமளவென வேலைகளை ஆரம்பித்தார் பி.வாசு. ஆனால் மன்னன் படத்தின் ஒரிஜனல் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி புரடக்ஷன்ஸ், அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.

நாங்களே விக்ரம் பிரபுவை வச்சு பண்ணலாம்னு இருக்கோம் என்று கூறிவிட்டார்கள். அப்புறம் என்னாச்சோ? மீண்டும் அப்படத்தின் ரீமேக் விஷயத்தில் வேறொரு முடிவை எடுத்துவிட்டதாம் சிவாஜி புரடக்ஷன்ஸ். லாரன்சுக்கு இருக்கிற வியாபார லாபத்தை ஏன் விட்டுக் கொடுக்கணும். பி.வாசு இயக்கத்தில் ஆரம்பித்துவிடலாம் என்று நினைத்து வேலைகளை முடுக்கிவிட அங்குதான் ஒரு சின்ன தடுமாற்றம்.

தமன்னா, அனுஷ்கா, நயன்தாரா ஆகிய மூவருமே சொல்லி வைத்த மாதிரி லாரன்சுடன் நடிப்பதை விரும்பவில்லையாம். என்ன காரணத்தாலோ வெவ்வேறு காரணங்களை சொல்லி மறுத்திருக்கிறார்கள்.

ஒருவேளை லாரன்சின் அரசியல் ஆசை இவர்களுக்கு அலர்ஜியை வரவழைத்ததோ என்னவோ? விஜயசாந்தியின் திமிரான ரோலுக்கு இவர்களை விட்டால் ஆள் இல்லை என்பதால், மீண்டும் அவர்களில் ஒருவரை கரைக்கும் முயற்சியில் இருக்கிறார் பி.வாசு.