மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘காற்று வெளியிடை’ ஏப்ரல் 7-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.

கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ருக்மணி விஜயகுமார், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காற்று வெளியிடை’. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னம் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சென்னை, லடாக், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது.

‘காற்று வெளியிடை’ படத்தின் முதல்பார்வை இணையத்தில் வெளியிடப்பட்டன. 50 விநாடிகள் மட்டுமே அடங்கிய இந்தப் பார்வை பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் ஒரு பாடலை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடவும் படக்குழு தீர்மானித்துள்ளது.

‘ரோஜா’ படக்கூட்டணியான மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்தின் மூலம் 25வது வருடத்தில் அடியெடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஏப்ரல் 7-ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.