Tamil Cinema News | சினிமா செய்திகள்
செர்பியாவில் கடைசி ஷெட்யூலை பரபரப்பாக முடித்த மணிரத்னம்… செக்கச்சிவந்த வானம் செப்டம்பரில் ரிலீஸ்?
காற்று வெளியிடை படத்துக்குப் பின்னர் மணிரத்னம் இயக்கிவரும் படம் செக்கச்சிவந்த வானம். மல்ட்டி ஸ்டாரர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில், அர்விந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைடாரி, பிரகாஷ் ராஜ், ஜெய சுதா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
படத்தில் அர்விந்த் சாமி, அருண் விஜய் மற்றும் சிம்பு ஆகியோர் சகோதரர்களாக நடித்திருப்பதாக ஒரு தகவல் கசிந்திருக்கிறது. சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் மணிரத்னமே இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். துபாயில் விறுவிறுப்பாக ஷூட்டிங்கை நடத்தி முடித்த படக்குழு, இறுதி ஷெட்யூலை செர்பியாவில் நடத்தி முடித்திருக்கிறது. படத்தின் முக்கியமான காட்சிகளை மணிரத்னம் இந்த கடைசி ஷெட்யூலிலேயே முடித்தார் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள். இதில், அரவிந்த் சாமி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தங்கள் போர்ஷன்களை ஏற்கனவே முடித்துக் கொடுத்து விட்டனர்.
நீண்டநாட்களுக்குப் பின்னர் சிம்பு நடிக்கும் படம், பெரிய ஸ்டார்கள் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் என பல்வேறு தகவல்களால் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் வகையில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ஷீட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில புகைப்படங்களை சமீபத்தில் சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டிருந்தார். பொதுவாக மணிரத்னம் படம் என்றாலே ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளிவருவது கடினம். ஆனால், செக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் டெம்போவை ஏற்றியது.
ஜோதிகாவுக்கு காட்சியை மணிரத்னம் விவரிப்பது மற்றும் பெரிய கட்டிடங்கள் பின்னணியில் சிம்பு ஸ்டைலாகக் கண்ணாடியுடன் போஸ் கொடுப்பது என மேலும் சில புகைப்படங்களை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வெளியிட, அந்த புகைப்படங்கள் வைரலாகின.
செர்பியாவில் கடைசி ஷெட்யூல் நேற்றுடன் முடிந்தநிலையில், படக்குழுவினர் விரைவில் சென்னை திரும்ப இருக்கிறார்கள். இதையடுத்து, படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை 2 மாதத்தில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.
போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் எந்த சிக்கலும் இல்லாமல் திட்டமிட்டபடி நடந்தால் படம் செப்டம்பரில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள செக்கச்சிவந்த வானம் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். முதலில் அருண் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் பஹத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமானதால், அவர் படத்திலிருந்து விலகினார். இதனால், அருண் விஜய் படக்குழுவில் இணைந்தார். மணிரத்னம் படத்தில் அருண் விஜய் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
