இன்று உலக சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்ப வைத்துவிட்டார் மிஸ்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி. பாகுபலி 1, பாகுபலி 2 என்று அவர் இயக்கிய இரண்டு படங்கள், இந்திய சினிமா வரலாற்றில் ஆயிரம் கோடியை தாண்டி கலெக்ஷன்களை குவித்து அழியா புகழை பெற்றுவிட்டது. அவரும் சரித்திரக் கதைக்கு சில காலம் ஓய்வு கொடுத்துவிட்டு, மீண்டும் வேறொரு மிரட்டலுக்கு தயாராக சுமார் ஒரு வருடமாவது ஆகும். அவரது புகழை அவரே வந்து முறியடித்தால்தான் உண்டு. ஒருவேளை பாகுபலியை விட ஷங்கர் இயக்கிவரும் எந்திரன்2 இருந்துவிட்டால், அதான்டா… ஷங்கர் என்று மார்தட்டிக் கொள்ளலாம்.

இப்படி சினிமாவுலகம் இவர்களை பற்றி பேசிக் கொண்டிருக்க… இவ்வளவு புகழையும் எப்பவோ அறுவடை செய்திருக்க வேண்டியவர் நம்ம மணிரத்னம்தான் என்கிறது இன்டஸ்ட்ரி. பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க நினைத்தவர் மணிதான். இதற்காக திரைக்கதை எழுதி, வசனங்களையும் இன்னொரு எழுத்தாளர் உதவியுடன் எழுதி முடித்து, படப்பிடிப்புக்கு லொக்கேஷன்களையும் பார்த்தவர்தான் அவர். இது நடந்து ஆறேழு வருஷமாச்சு. 70 நாட்களுக்குள் ஷுட்டிங்கை முடிக்க வேண்டும். பட்ஜெட் இத்தனை கோடியை தாண்டக் கூடாது. அப்பதான் லாபம் கிடைக்கும் என்றெல்லாம் கணக்குப் போட்டவருக்கு, வந்த விடை செம குழப்பம்.

இவர் நினைத்த மாதிரி பொன்னியின் செல்வன் கதையை 70 நாட்களில் எடுத்து முடிக்க முடியாது என்பதுதான் முதல் சறுக்கல். அதற்கப்புறம் ஒரே படத்திற்காக பல மாதங்கள் கால்ஷீட் கொடுக்க தயாராக இல்லாத ஹீரோக்கள். ஒருவழியாக பொ.செ நாவலை பரணுக்குள் எறிந்துவிட்டு, காமா சோமா படங்கள் பக்கம் தாவி, அதுவரை பெற்ற புகழை அநியாயத்துக்கு காவு கொடுத்து வருகிறார் மணி.

பிரபாஸ் போல, ஒரு படத்திற்காக ஐந்து வருடம் உழைக்கிற ஹீரோவும், பட்ஜெட் மற்றும் ராத் தூக்கம் பாராமல் உழைக்கும் ராஜமவுலிகளும் கிடைத்தாலொழிய பொன்னியின் செல்வன் சாத்தியமல்ல.