பகல் நிலவு, இதயகோயில், மெளனராகம் என காதல் படங்களாக இயக்கி வந்த மணிரத்னம், கமலை வைத்து நாயகன் என்ற கேங்ஸ்டர் படத்தை இயக்கினார். அந்த படம் இந்திய அளவில் பேசப்பட்டது. அதையடுத்து அக்னி நட்சத்திரம், அஞ்சலி போன்ற படங்களை இயக்கியவர் மீண்டும் ரஜினியை வைத்து தளபதி என்ற இன்னொரு கேங்ஸ்டர் படத்தை இயக்கினார். அப்படி அவர் இயக்கிய இரண்டு கேங்ஸ்டர் படங்களும் சூப்பர் ஹிட்டானது. என்றபோதும் பின்னர் அந்த மாதிரியான அதிரடி படங்களை இயக்கவில்லை மணிரத்னம்.

இந்நிலையில், தற்போது கார்த்தி நடிப்பில் காற்று வெளியிடை படத்தை இயக்கியுள்ள மணிரத்னம், மறுபடியும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் தனது அடுத்த படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி தான் இயக்கும் படம் முன்பு இயக்கிய கேங்ஸ்டர் படங்களை முறியடிக்கும் அதிரடி படமாக இருக்க வேண்டும் என்பதற்காக சில முன்னணி ஹீரோக்களிடம் கால்சீட் பேசி வருகிறாராம் மணிரத்னம்.