இந்திய திரையுலகில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பாத நடிகர், நடிகைகளே இல்லை என்று கூறலாம். உலக அழகி ஐஸ்வர்யாராய் முதல் பல பிரபலங்களும், பிரபலங்களின் வாரிசுகளும் மணிரத்னம் படத்தில்தான் அறிமுகமாகியுள்ளனர்.

சிவகுமார் மகன் சூர்யா மணிரத்னம் தயாரித்த ‘நேருக்கு நேர் படத்திலும், பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் ‘கடல்’ படத்திலும், மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ‘ஓகே கண்மணி’ படத்திலும் அறிமுகமாகியுள்ள நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான ராம்சரண்தேஜா, மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கார்த்தி, அதிதிராவ் நடிப்பில் ‘காற்று வெளியிடை’ படத்தை இயக்கி வரும் மணிரத்னம் இந்த படத்தை முடித்தவுடன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ராம்சரண்தேஜா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகவுள்ள இந்த படம் ஒரு ஆக்சன் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.