ஒவ்வொரு நடிகருக்கும் அவர்களுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையான படம் ஒன்று கண்டிப்பாக இருக்கும். அந்தத் திருப்புமுனை ஏற்படுவதற்கு அந்தப் படங்களின் இயக்குனர்கள் தான் கண்டிப்பாகக் காரணமாக இருப்பார்கள். இதற்கு உதாரணமாக பல நடிகர்களையும் சொல்லலாம், பல இயக்குனர்களையும் சொல்லலாம். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள முன்னணி ஹீரோக்களுக்கு முக்கிய திருப்புமுனையைக் கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

அவர் இயக்குனராக அறிமுகமான படம் அஜித் நாயகனாக நடித்த ‘தீனா’. அஜித்தின் திரையுலகப் பயணத்தில் இந்தப் படம் மிக மிக முக்கியமான படம். இந்தப் படத்தில் அடியாள் கதாபாத்திரத்தில் நடித்த அஜித்தை அவருடன் இருப்பவர்கள் ‘தல, தல’ என்று அழைப்பார்கள். அந்தப் படத்தில் ஆரம்பமான ‘தல’ அஜித்திற்கு நிரந்தரமான செல்லப் பெயராக அமைந்துவிட்டது.விஜயகாந்த் என்றாலே அதிரடி, ஆக்ஷன் ஹீரோவாக நடித்த படங்கள்தான் அதிகம். ஆனாலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்து வெளிவந்த ‘ரமணா’ படம் விஜயகாந்தின் படங்களில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது.

சூர்யாவை மிகவும் ஸ்டைலான நடிகராக மாற்றிய படம் ‘கஜினி’. ஏ.ஆர்.முருகதாஸின் இயக்த்தில் வெளிவந்த இந்தப் படத்தின் வெற்றி சூர்யாவை கமர்ஷியல் ஹீரோக வேறு ஒரு அந்தஸ்தில் உயர்த்தியது. தெலுங்கிலும் சூர்யாவிற்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.விஜய் எத்தனையோ ஆக்ஷன் படங்களில் நடித்திருந்தாலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வெளிவந்த ‘துப்பாக்கி’ படம் அவரை மேலும் உயர்த்திக் காட்டியது. ‘ஐயாம் வெயிட்டிங்’ என்ற அந்த ஒரு வசனம் இன்றும் பாப்புலர் ஆக இருக்கிறது.

ஹிந்தியில் ஆமீர்கான் நடிக்க ‘கஜினி’ படத்தை ரீமேக் செய்து இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். அந்தப் படம்தான் 100 கோடி கிளப் என்ற ஒன்றை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தது.இப்படி பல ஹீரோக்களுக்கு திருப்புமுனை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், இப்போது மகேஷ்பாபுக்கு ஒரு திருப்புமுனையை ‘ஸ்பைடர்’ படம் மூலம் ஆரம்பித்து வைத்துவிட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ‘பூம் பூம்..’ பாடல் வீடியோ தெலுங்கு ரசிகர்களிடையே மகேஷ் பாபுவை மேலும் கொண்டாட வைத்துவிட்டது. மகேஷ் பாபு இதுவரை நடித்த படங்கள் அனைத்தையும் மிஞ்சி இந்த ‘ஸ்பைடர்’ படம் அவருக்கு பெரிய மாற்றத்தைத் தரும் என இப்போதே நம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.