ஹைதராபாத்: இந்திய அணியின் பெஸ்ட் கேப்டன் என வர்ணிக்கப்படும் மகேந்திர சிங் டோணி, ஐபிஎல் தொடரில் 7- வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்கிய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 10 வது ஆண்டை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டது முதல் இருந்தே இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக வலம் வரும் டோணி தொடர்ந்து 2016-ம் ஆண்டு வரை கேப்டனாக இருந்தார்.

 

2008-ல் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவற விட்டது.

2009-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. 2010-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை தட்டிச் சென்றது.

2011-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது.

2012-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் தோல்வியடைந்து ஹாட்ரிட் சாதனையை தவறவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

2013-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. 2015-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. 2016-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளில் வென்றுள்ளது.

2008 முதல் 2016 வரை நடைபெற்ற 9 சீசனுக்கு ஐ.பி.எல். அணியின் கேப்டனாக வலம் வந்தவர் டோணி. இதில் 2009, 2014 மற்றும் 2016-ம் ஆண்டு மட்டுமே டோணி தலைமையிலான அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. மற்ற 6 முறை முன்னேறியுள்ளது.

தற்போது டோணி கேப்டனாக இல்லாவிட்டாலும், அவர் இடம்பெற்றுள்ள புனே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கேப்டனாக இல்லாவிட்டாலும் 10 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் 7- வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்கி சாதனை படைத்துள்ளார் டோணி.