Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரீ எண்ட்ரியில் மணிரத்னம் செய்த மேஜிக் – அரவிந்த் சாமி

முதல் இன்னிங்கிஸில் சாதாரண நாயகனாக இருந்தவருக்கு, ரீ எண்ட்ரியில் மணிரத்னம் செய்த மேஜிக்கால் தெறிக்க வைக்கும் நடிகனாக மாறி இருக்கும் முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தளபதி படத்தில் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் அரவிந்த் சாமி. ஒரு பக்கம் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி, மறு பக்கம் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி. இருவருக்கும் இடையே நடிப்பதே பெரிய விஷயமாக இருக்கும் நடிகர்கள் மத்தியில், சாதாரணமாக அரவிந்த் சாமி என தன் பெயரையும் பதித்து விட்டார். அதை தொடர்ந்து, ரோஜா, பாம்பே போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சிம்மாசனத்தை உருவாக்கி வைத்திருந்தார். வெள்ளை நிறத்தில் சிரித்தால் அழகாக இருக்கும் அரவிந்த் சாமியை பார்த்தால் ரசிகைகள் சொக்கி தான் போனார்கள். ஆனால், திடீரென நடுவில் படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். அதை தொடர்ந்து, அவரின் உடல் எடை அதிகரித்த படங்கள் எல்லாம் வெளியாகியது. அப்போ, அரவிந்த் சாமி அவ்வளவு தான் என கிசுகிசுக்கப்பட்டது. இருந்தும், தன்னம்பிக்கையுடன் எழுந்து வந்து மீண்டும் கோலிவுட்டில் ஸ்டார் நட்சத்திரமாக இருக்கிறார்.
இவரின் ரீ எண்ட்ரி கடல் படத்தின் மூலம் தொடங்கியது. இந்த திடீர் வாய்ப்பு குறித்தும், மணிரத்னம் தன் வாழ்வில் செய்த மேஜிக் குறித்தும் அரவிந்த் சாமி சமீபத்தில் மனம் திறந்து இருக்கிறார். அவர் பேசுகையில், எனக்கு விபத்து நடந்து பெரும் வலியில் உடம்பு சரியில்லாமல் இருந்தேன். நிறைய மருத்துவம், மாத்திரைகள், ஓய்வு எல்லாம் சேர்த்து என்னை ஒரு 105 கிலோவிற்கு கொண்டு சென்று விட்டது. உடலில் ஆரோக்கியம் குறைந்து இருந்தது. இதனால் பட வாய்ப்பே வேண்டாம் என நினைத்தேன். என் தினசரி நடவடிக்கையை செய்யவே கஷ்டப்பட்டேன். ஒரு கால் நடக்க முடியாமல் வேறு இருந்தது. கொஞ்சம் சரியான நேரத்திலும் நடித்தால் மீண்டும் கஷ்டப்படுவேனோ என பயத்துடனே இருந்தேன்.
அப்போது தான் மணிரத்னம் என்னை திடீரென கூப்பிட்டார். அவரை சந்திக்க சென்றேன். இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அவர் ஒரு படம் இருக்கிறது எனக் கூறினார். நான் மறுபடி நடிக்க வேண்டும் என சொல்வது போல அந்த உரையாடல் நீண்டது. என்னால் முடியும் என நம்பிக்கையே இல்லை. ஆனால், மணிரத்னம் உன்னால் முடியுமா? இல்லையா? என கேட்கவில்லை. பிடிக்கிறதா மட்டும் என சொல் என்றார். தொடர்ந்து, அர்ஜூன் கதாபாத்திரம், வேறு ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. உனக்கு எது விருப்பமோ செய் எனத் தெரிவித்தார். நான் உங்களுக்கு எது ஓகேவோ அதுவே செய்கிறேன். ஆனால் ஒரு மாதம் எனக்கு நேரம் வேண்டும். அப்போது மீண்டும் சந்திப்போம். அந்நேரம் எனக்கு நம்பிக்கை இருந்தால் நடிக்கிறேன் என்றேன். அதுப்போல, நானும் தேவையான எல்லா பயிற்சிகளை செய்தேன். அதன் காரணமாக 14 கிலோ குறைத்தேன். எனக்கு என் மீது இருந்த தன்னம்பிக்கையை விட அவருக்கு என் மீது இருந்த நம்பிக்கை அதிகம். அதுவே என்னை இந்த இடம் வரை கொண்டு வந்திருக்கிறது எனத் தெரிவித்தார்.
