அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பலர் உயிரிழந்த நிலையில், பலர் மண் சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.

சுமார் 70 பேர் வரையில் காணாமல் போயுள்ள நிலையில், அவர்கள் உயிருடன் வருவார்கள் என உறவினர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மண்சரிவில் காணாமல் போன இளம் யுவுதி ஒருவரின் சடலத்தை நாயொன்று கண்டுபிடித்துள்ளது.

23 வயதான நிரோஷா ஷயாமலி குணரத்ன என்ற இளம் யுவதியின் சடலமே 5 நாட்களின் பின்னர் நாயினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி எஹெலியகொட, மாரபே, போகொட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் குறித்த யுவதி மாண்டு போயிருந்தார்.

இந்த இளம் பெண், தனது காதலனின் வீட்டுக்கு அருகில் ஏற்பட்ட மண் சரிவை பார்த்து கொண்டிருந்த போது திடீரென வெடிப்புடனான மண் சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது. அங்கு அருகில் இருந்தவர்கள் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியுள்ளனர். எனினும் இந்த பெண் தனது வீட்டை நோக்கி ஓடும் போது மண்ணில் புதைந்துள்ளார்.

5 நாட்களாக பிரதேச மக்கள், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி தேடியுள்ளனர். 31ஆம் திகதி 5.30 மணியளவில் நாய் ஒன்று அந்த இடத்தை மோப்பம் பிடித்த நிலையில் ரத்வீர என்ற நபர் அதனை அவதானித்துள்ளார்.

அந்த நாய் மண் மற்றும் கற்கள் நிறைந்த இடம் ஒன்றில் தரையை தோண்டிய நிலையில் ரத்வீரவை நோக்கி பார்த்துள்ளது.

பின்னர் அங்கிருந்த இருவருடன் நாய் காட்டிய இடத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது அந்த நாய் ரத்வீரவின் நெஞ்சு பகுதியில் தனது இரண்டு கால்களை வைத்து அவரிடம் உரிய இடம் தொடர்பில் தனது மொழியில் தெளிவுபடுத்தியுள்ளது.

பின்னர் நாய் கூறிய இடத்தில் தேடி பார்த்த போது காணாமல் போன பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பெண்ணுக்காக காத்திருந்த தந்தை கடந்த 30ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.