அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். என்னை அறிந்தால், பாகுபலி, ருத்ரமா தேவி, இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்தன. தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்திலும் சூர்யா ஜோடியாக எஸ்-3 படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். எஸ்-3, சிங்கம் படத்தின் 3-ம் பாகமாக தயாராகிறது. அனுஷ்காவுக்கு 34 வயது ஆகிறது.

இதனால் அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் விரைவில் அவருக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் பரவி உள்ளது. இந்த நிலையில் காதல் மற்றும் திருமணம் குறித்து அனுஷ்கா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

‘‘காதல் என்பது வெறும் கவர்ச்சி. அது ஒரு மாயை. தெளிவில்லாத வயதில் ஏற்படுகிறது. இளம் வயதில் எல்லோரையும் அந்த மாயை பிடித்து ஆட்டுகிறது. வளர்ந்த பிறகு காதல் பெயரால் செய்த வேலைகளை நினைத்து பார்த்தால் சிரிப்புதான் வரும். எனக்கு காதல் அனுபவம் இல்லை. காதலிக்க நேரமும் இல்லை. சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். சினிமாவை மட்டுமே இப்போது காதலிக்கிறேன்.

என்னுடைய திருமணம் நேரம் வரும்போது நடக்கும். எனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அவரிடம் ஒளிவு மறைவுகள் இருக்க கூடாது. வெளிப்படையாக பழக வேண்டும். எனக்கு பிடிக்கும் விஷயங்கள், அவருக்கும் பிடிக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஆண் ஒருவரை சந்திக்கும் போது என் திருமணம் நடக்கும். கடந்த வருடம் நான் நடித்த எல்லா படங்களும் நன்றாக ஓடி எனக்கு பெயர் வாங்கி கொடுத்தன. இந்த வருடத்திலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.’’

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.