தமிழகத்தில் மே 15 -க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போது தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது. சசி ஆதரவு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு புரட்சியில் ஈடுபட்ட மாணவர்கள், சமூக வலைத்தளங்களின் மூலம் இளைஞர் கட்சி என்ற அமைப்பு உருவாக்கி இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களின் மூலம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் நாம் என்ன செய்ய போகிறோம் என்று வேடிக்கை பார்க்கின்றன.

இதோ வரலாற்றில் முதன் முறையாக இளைஞர்கள் நாங்கள் எதிர்க்க முன்வருகின்றோம். ஆதரவு தர நீங்கள் வருவீர்களா? அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லை. நீங்கள் என்ன செய்ய போறீர்கள் என்று ஏளனம் செய்பவர்களே ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.

நாங்கள் அரசியல்(பயமறியா) குழந்தைகள். நாங்கள் எல்லாவற்றையும் அனுபவத்தின் மூலம் பழகி கொள்ளுவோம். ஒருமுறை ஆட்சியை எங்கள் கைகளில் கொடுத்து பாருங்கள்.

234 தொகுதிகளிலும் யார் தயவும் இல்லாமல் நிற்போம். விளைவுகள் வருவதை சந்திக்க தயார். இதோ உன் சமூக இளைஞர்கள் விழித்து கொண்டார்கள். அவர்கள் சோர்ந்து போகும் முன் தட்டிக்கொடுங்கள் என் அன்பு தமிழ் சமூகமே, என்று இளைஞர்கட்சி, தமிழக மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் மாணவர்கள் களம் இறங்கினால், அரசியல் கட்சிகள் பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. தமிழக மக்களும் மாற்றத்தை எதிர்பார்த்தே காத்திருக்கிறார்கள்.