கொல்கத்தா : புதிய மார்க்கெட் பகுதியில் கிடைக்கும் கலர் ஃபுல்லான சர்பத் தயாரிப்பில் பெரும் மர்மம் மறைந்துள்ளது. அங்கு தயாரிக்கப்படும் சர்பத்தில் பிணவறையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஐஸ் கட்டிகள் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது பிணங்கள் கெட்டு போகாமல் பாதுகாக்க பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் கொண்டு சர்பத் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொல்கத்தா மாநகராட்சி மேயர் அதின் கோஷ் புதிய மார்க்கெட் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது இந்த திடுக்கிடும் உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து 10 வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்த வகையான ஐஸ் கட்டிகள் பிணவறைகள் மற்றும் பெரு நிறுவனங்களில் மட்டும் தான் உபயோகிக்கப்படுகின்றன. கொல்கத்தாவில் உள்ள பிணவறைகளில் இருந்து இந்த ஐஸ் கட்டிகளை வியாபாரிகள் விலை கொடுத்து வாங்குவது தெரியவந்துள்ளது. சுமார் 80,000 உணவு வியாபாரிகள் இந்த வகை ஐஸ் கட்டிகளை உபயோகிப்பது தெரியவந்துள்ளது.

இந்த ஐஸ் கட்டிகளை பயன்படு்த்தும் வியாபாரிகளை கண்டறிந்து இவை முற்றிலுமாக களையப்படும் என்று மேயர் அதின் கோஷ் உறுதி அளித்துள்ளார். மேலும், ஐஸ் கியூப்ஸ் மட்டு்ம் தான் சாப்பிடுவதற்கு ஏற்றவை என்றும், அவை அதிக விலைக்கு விற்கப்படுவதால் பிணவறையில் கிடைக்கும் ஐஸ் கட்டிகளை குறைந்த விலைக்கு வியாபாரிகள் வாங்கிவிடுகின்றனர் என்றும் அதின் கோஷ் தெரிவித்துள்ளார்.

அதே போல் சாலையோரம் தயாரிக்கப்படும் சிக்கனின் நிறம் மாறுவதற்காக குறிப்பிட்ட அமிலம் சேர்க்கப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. வீடுகளுக்கு வண்ணம் தீட்டும் பெயிண்ட்டை சிக்கனில் சேர்த்து சமைக்கின்றனர். மேயர் அதின் சிக்கன் மற்றும் சாஸ் பாட்டிலை பறிமுதல் செய்தார்.