தொடரூந்து பயணத்தின்போது வட்ஸ்அப் சாட்டிங்கில் வெடிகுண்டு என்று டைப் செய்து அனுப்பியதால், 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளாவை சேர்ந்த 6 இளைஞர்கள் சமீபத்தில் மும்பை புறநகர் தொடரூந்தில் நேற்று மாலை பயணம் செய்துள்ளனர்.

அப்போது அவர்களில் ஒருவர் தன்னுடைய வட்ஸ் அப் மூலமாக, தாங்கள் மும்பைக்கு வந்தடைந்துவிட்டதாக நண்பருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

அதில் நாங்கள் மும்பைக்கு வந்துவிட்டோம் என்பதை ‘we are reached Bomb’ என்று ஆங்கிலத்தில் டைப் செய்து அனுப்பியுள்ளனர்.

இதை கவனித்த பயணி ஒருவர், BOMBAYக்கு பதிலாக டைப் செய்யப்பட்டிருந்த ‘BOMB’ என்ற வார்த்தையை வெடிகுண்டு என புரிந்துகொண்டுள்ளார்.

இதையடுத்து உடனே தொடரூந்து பொலிசாரை தொடர்புகொண்ட அந்த நபர், சந்தேகத்திற்குரிய வகையில் உள்ள 6 இளைஞர்கள் வெடிகுண்டை பற்றி பேசிக்கொண்டிருப்பதாக புகார் கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்து வந்து 6 இளைஞர்களை கைது செய்த தொடரூந்து பொலிசார், அவர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மாணவர்கள் வைத்திருந்த உடைமைகள் சோதிக்கப்பட்டதில் சந்தேகத்திற்குரிய எந்த பொருட்களும் பொலிசாரிடம் சிக்கவில்லை.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 6 இளைஞர்களும் ராஜ்பூரில் உள்ள ஒரு கோச்சிங் சென்டரில் உருது கற்றுக்கொள்வதற்காக கடந்த 1 மாதமாக தொடரூந்தில் பயணம் செய்து வருவது தெரியவந்துள்ளது.

மாணவர்கள் பற்றி சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் விசாரித்ததில் 6 இளைஞர்களும் அப்பாவிகள் என பொலிசாருக்கு தெரியவந்ததையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.