Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆசிட் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முன்னணி நடிகர்..

ஆசிட் தாக்குதலில் இருந்து மீண்ட பெண் தொழில் முனைவோர்களை நேரில் சந்தித்து ஊக்கமளித்திருக்கிறார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்.
சினிமாவில் நாயகனாக நடித்த சஞ்சய் தத் நிஜ வாழ்வில் ஏறக்குறைய ஒரு வில்லன் போலவே வாழ்ந்திருந்தார். மும்பையின் நிழல் உலக தாதாக்களுடன் இருந்த தொடர்பு, 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் இவரைச் சிக்க வைத்தது. ஆயுதங்கள் பதுக்க உதவியதாக இவர் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபணமாகவே, சிறையில் சில ஆண்டுகளை சஞ்சய் தத் கழிக்க வேண்டியதாயிற்று.
இருப்பினும், சிறை விதிகளைத் தளர்த்தி அவருக்கு பரோல் வழங்கியதோடு மட்டுமல்லாமல், அவரை தண்டனைக் காலம் முடியும் முன்னரே ரிலீஸ் செய்ததாக மகராஷ்டிரா அரசு மீது ஒரு குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டது. அதேபோல், பெண்கள் தொடர்பு, போதை வஸ்துக்களுக்கு அடிமை என சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மிக நெருக்கமாகப் பதிவு செய்யும் வகையில் சஞ்சு படம் தயாராகி இருக்கிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் வரும் 29ம் தேதி ரிலீஸாகிறது.
சஞ்சய் தத் சிறையிலிருந்து விடுதலையான பின்னர் நடிக்கும் முதல் படம் பூமி. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்த நிலையில், படத்தின் ஷூட்டிங் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதற்காக லக்னோவில் முகாமிட்டுள்ள சஞ்சய் தத், ஆசிட் தாக்குதலில் இருந்து மீண்டு தொழில் முனைவோர்களாக உருவெடுத்துள்ள பெண்களை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தினார். லக்னோவின் கோமதி நகரில் இருக்கும் ஒரு டீக்கடை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. காரணம், அங்கு பணிபுரியும் பெண்கள் அனைவரும் பல்வேறு இடங்களில், சம்பவங்களில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டவர்கள்.
அந்த பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி அளிக்கவும், ஒரு வேலைவாய்ப்பைக் கொடுக்கும் வகையிலும் அந்த டீக்கடை மற்றும் உணவகம் செயல்பட்டு வருகிறது. பூமி ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து அந்த கடைக்கு திடீர் விசிட் அடித்த சஞ்சய் தத், அங்கு பணிபுரியும் பெண்களுடன் பேசி மகிழ்ந்திருக்கிறார். கடைக்கு வந்த அவருக்கு ஆரத்தி எடுத்து, திலகமிட்டு பெண்கள் வரவேற்றனர். சிறிதுநேரமே அந்த கடையில் சஞ்சய் தத் இருந்தாலும் பெரும்பான்மையான நேரம் அவர்களுடன் பேசி சிலாகித்திருக்கிறார். மேலும், தான் லக்னோ வரும்போதெல்லாம், தவறாமல் கடைக்கு வந்து செல்வேன் என்றும் அந்த பெண்களிடம் அவர் உறுதியளித்திருக்கிறார்.
