தனக்கு வந்த அட்வான்ஸ் தொகை ஒரு கோடியை எவ்வித தயக்கமும் இல்லாமல் அப்படியே ஏழைகளுக்காக அள்ளிக் கொடுத்தவர் லாரன்ஸ். இதற்கு முன்பு அவர் செய்த உதவிகளால் எத்தனையோ இதயங்கள் இப்போதும் உயிர் துடித்துக் கொண்டிருக்கின்றன. மருத்துவம், கல்வி, உணவு என்று தனது சம்பாத்யத்தின் பெரும் பகுதியை அள்ளி அள்ளிக் கொடுத்தே ஆனந்தப்படுகிற ஒரு மனுஷன், சாதாரணமான ஒரு சினிமா டைட்டிலை விட்டுக் கொடுக்கவா தயங்கப் போகிறார்?

அதையும் “இந்தாங்க…” என்று எடுத்துக் கொடுத்ததை நாடறியும். முக்கியமாக அஜீத்தின் ‘வேதாளம்’ படத் தலைப்பு லாரன்ஸ்சுக்குதான் சொந்தம். தனது கம்பெனி பெயரில் அதை ரிஜிஸ்தர் செய்து வைத்திருந்தார் அவர். தலைப்புக்காக பலவாறு யோசித்து கடைசியாக ‘வேதாளம்’ என்ற தலைப்பை முடிவு செய்தபோது, அது லாரன்ஸ் கம்பெனி பெயரில் இருப்பதை அறிந்தார் அஜீத். அவரே கேட்டால் அது சங்கடம் என்பதால், டைரக்டர் சிவா தரப்பிலிருந்து கேட்கப்பட்டது. எவ்வித தயக்கமும் இல்லாமல் கொடுத்து உதவினார் லாரன்ஸ். அதற்கப்புறம் அஜீத் போனில் அழைத்து லாரன்சுக்கு நன்றி சொன்னது பழங்கதை.

இப்போது விஜய் படத்திற்கு ‘பைரவா’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் அல்லவா? அந்த தலைப்பும் லாரன்சுக்கு சொந்தமானதுதான். இப்படியொரு தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று டைரக்டர் பரதன் நினைத்து அதை பதிவு செய்யப் போனால், அப்புறம்தான் விஷயம் தெரிந்ததாம். அதை லாரன்ஸ் பதிவு செய்திருக்கிறார் என்பது. தயங்கி தயங்கி அவரிடம் விஷயத்தை சொல்ல, எவ்வித தயக்கமும் இல்லாமல் “எடுத்துக்கோங்க” என்று கூறிவிட்டார் லாரன்ஸ்.

அதற்கப்புறம் விஜய்யும் போன் செய்து நன்றி சொன்னாராம் லாரன்சுக்கு!