சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று நாட்டின் 68வது குடியரசு தின விழாவில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவில் அவர் பேசுகையில், நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நமது நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்குட்பட்டுதான் தீர்ப்புகளை வழங்க வேண்டியுள்ளது.

தீர்ப்பு வழங்கும்போது சட்ட திட்டங்களைதான் நீதிபதிகள் கருத்தில் கொள்வார்கள். நமது நாட்டில் சட்டத்துறை முக்கிய அங்கம் வகிக்கிறது. பல நேரங்களில் பெரும்பான்மை மக்களின் கருத்தும், எதிர்பார்ப்பும் வேறுபட்டு காணப்படுகின்றன.

எனவே மக்களின் விருப்பத்தை கோர்ட்டால் நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறது. சட்டப்படிதான் நீதிபதிகள் செல்ல வேண்டி வரும் என்று சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்களும், பொதுமக்களும் பெரும் புரட்சியையே நடத்தினர். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் சில அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த சூழ்நிலையில், தலைமை நீதிபதியின் கருத்து முக்கியத்துவம் பெறுவதாக கருதப்படுகிறது.