பெங்களூர்: ஐபிஎல் டி20 சீசன் 10 எலிமினேட்டர் சுற்று போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை, கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது,

10வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3வது இடம் பிடித்த ஹைதராபாத் சன் ரைசர்ஸ், 4வது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஓபனிங் பேட்ஸ்மேன்களாக கேப்டன் வார்னர், ஷிகர் தவான் களமிறங்கினர். 11 ரன்கள் எடுத்த நிலையில் தவான் வெளியேறினார். அதன்பின்னர் வில்லியம்சன் 26 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 24 ரன்களிலும், வார்னர் 35 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தும் ஆட்டமிழந்தனர்.

காயத்துடன் களமிறங்கிய யுவராஜ் சிங், 9 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். தமிழக வீரர் விஜய் சங்கர் 17 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் என 22 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார், ஜோர்டான் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

ஓஜா 16 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் 129 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா களமிறங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

தொடா்ந்து 3 மணி நேரத்திற்கும் மேல் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் நள்ளிரவு 12.55-க்கு ஆட்டம் துவங்கியது. தொடர் மழையால் ஆட்டத்தை 20 ஓவா்கள் முழுவதுமாக நடத்த இயலாத சூழல் உள்ளதாக நடுவர்கள் கூறினர். இதனால் கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 5.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் வெற்றிதன் மூலம் பெங்களூரில் 19ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கான 2வது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது கொல்கத்தா. அதில் தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.