விஜய் ஆண்டனி நடித்து வரும் கொலைக்காரன் படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் ஒரு முக்கிய வேடத்தில் இணைந்து இருக்கிறார்.

Kolaikaran

இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, நாயகனாக நான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, தற்போது அவருக்கு தமிழ் சினிமாவில் பல வாய்ப்புகள் நாயகனாக குவிந்து வருகின்றன. பெரும்பாலும் விஜய் ஆண்டனியின் படக்கதையை விட அதன் பெயர்களே சுவாரசியமாக இருக்கும்.

சமீபத்தில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளி படத்தில் நடித்து இருந்தார். அப்படத்திற்கு சரியான வரவேற்புகள் கிடைக்கவில்லை. இருந்தும் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்துள்ளன. தொடர்ந்து, காவல்துறை அதிகாரியாக இயக்குனர் கணேசா இயக்கத்தில் திமிரு புடிச்சவன் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக இணைந்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் ஒரு படமும், `திருடன்’ என்ற படத்திலும் நடிக்க உள்ளார். மேலும் இயக்குனர் மற்றும் நடிகரான எஸ்வி சந்திரசேகர் தற்போது நடித்து வரும் ‘டிராபிக் ராமசாமி’ படத்திலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

Kolaikaran

இந்நிலையில், இயக்குனர் ஆண்ட்ரூ இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் படத்திற்கு கொலைக்காரன் என பெயரிட்டுள்ளனர். தியா மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி நடைபெற இருக்கிறது. இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிகிறது. விஜய் ஆண்டனி, அர்ஜுன் இரண்டு பேரில் வில்லன் யார்? என்பது தான் படத்தின் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒன்லைன்னே படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

நடிகராக தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லை பதித்தவர் அர்ஜூன். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த இரும்புத்திரை படம் அவரின் திரை வாழ்வில் புதிய திருப்பு முனையாக அமைந்தது. வொயிட் டெவில்லாக நடித்திருந்த அவர் கதாபாத்திரம் பலரிடமும் அப்ளாஸ் பெற்றது. இந்நிலையில், மீண்டும் அர்ஜூனுக்கு இப்படம் பெரிய வரவேற்பை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.