ஆத்தூர் : ஜெ.,வுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்திற்கிடமாக தேடப்பட்டு வந்த ஜெ., மற்றும் சசிக்கு கார் ஓட்டிய டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி இறந்திருப்பதால் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கனகராஜ் விபத்தில் தான் இறந்தாரா அல்லது ஏதும் பின்புல சதி இருக்குமா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கனகராஜ் முதலில் கோடநாடு எஸ்டேட்டில் தோட்டத்தில் பணியாற்றியதாகவும் பின்னர் அவர் போயஸ் கார்டனில் சசிக்கு கார் ஓட்டியதாகவும் , ஆனால் கடந்த 2013 ல் கனகராஜ் பணியில் இருந்து நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த இடைப்பாடி – சின்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ்(36). இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் டிரைவராக பணியாற்றி உள்ளார். அதன் பிறகு சொந்தமாக கார் வாங்கிய இவர், வாடகைக்கு கார் ஓட்டி வந்துள்ளார். இன்று காலை இருசக்கர வாகனத்தில் கனகராஜ் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். தென்னங்குடிபாளயைத்தில் எதிரே வந்த கார் மோதியதில், கனகராஜ் படுகாயம் அடைந்தார். ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ப்டட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இவரது சாவில் மர்மம் ஏதும் இருக்குமா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கனகராஜ் குறித்து மேலும் சந்தேகங்கள்

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளார். இந்நேரத்தில் இந்த மரணம் நடந்துள்ளதால் போலீசார் படுவேகமாக விசாரித்து வருகின்றனர். கோட நாடு எஸ்டேட்டில் காவலாளி கொல்லப்பட்ட வழக்கில் கனகராஜ் என்ற ஒருவர் தேடப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தற்போது ஆத்தூர் வந்துள்ளார். விபத்தில் மரணம் அடைந்த கனகராஜ் நாம் தேடப்படும் குற்றவாளி தானா என உறுதிப்படுத்த வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் கனகராஜ் முதல்வரின் சொந்த தொகுதியான இடைப்பாடியை சேர்ந்தவர் ஆவார். கனகராஜ் மீது மோதிய போர்டு கார், கர்நாடக பதிவெண் கொண்டதாக உள்ளது. காரை ஓட்டி வந்தவரிடம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

சயானும் கார் விபத்தில் சிக்கினார்

 

கோடநாடு எஸ்டேட் காவலாளி வழக்கில் தேடப்பட்ட மற்றொரு நபரான சயன் என்பவரும் இன்று காலை நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளார் . பாலக்காடு பகுதியில் காரில் சென்றபோது இவரது கார் விபத்தில் சிக்கியிருக்கிறது. இவருடன் சென்ற 2 குழந்தைகள் இறந்துள்ளனர். சயான் பாலக்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கார் டிரைவர் கனகராஜுக்கு நெருக்கமான நபர் சயான். கோவை, குனியமுத்தூரில் உள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் இவர் சென்ற கார் விபத்தில் சிக்கியிருக்கிறது.