Tamil Cinema News | சினிமா செய்திகள்
தாடியை இன்சூரன்ஸ் செய்த கிரிக்கெட் வீரர்- கே.எல்.ராகுல் வெளியிட்ட வீடியோ! யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது தாடியை இன்சூர் செய்து இருக்கும் ருசிகர தகவலை கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் வெளியிட்டு இருக்கிறார்.
விராட் கோலி என்ற ஒற்றை பெயருக்கு பின்னால் ரசிகர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தாலும், தனக்கு சாதனை செய்வது தான் வாடிக்கை என ஒவ்வொரு முறையும் நிரூபித்து கொண்டே இருப்பவர். கிரிக்கெட்டில் ஒரு பக்கம் என்றால், விராட் தனது உடல் பராமரிப்பில் அதீத கவனம் செலுத்துவார். சமீபத்தில், வெளியான ஒரு தகவல் படி விராட் குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீரின் விலை கூட ரூ.600 என தெரியவந்துள்ளது. இது அவரிடம் பணம் இருக்கிறது என்பதற்காக இல்லை. கிரிக்கெட்டில் எப்போதுமே பிட்டாக இருக்க வேண்டும் என்பதால் உணவு முதற்கொண்டு தண்ணீர் வரை பார்த்து பார்த்து எடுத்து கொள்வதாக தெரிகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக உடற்பயிற்சி செய்பவரும் விராட் கோலி தான்.
பேச்சுலராக சுற்றி வந்த விராட், கடந்த வருட இறுதியில் அனுஷ்காவை கை பிடித்தார். தனது மனைவியை எங்குமே எப்போதுமே விட்டு கொடுக்காதவர். காதலியாக இருந்த போதே அவருக்காக சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தை தன் ரசிகர்களுக்கு எதிராக பதிவு செய்தவர். அவ்வளவு காதல் கொண்டு இருக்கும் விராட்டிற்கு இன்னொன்றின் மீது செம கிரேஸ் இருப்பதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.
விராட் வீட்டு சிசிடிவி காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் 2 நபர்கள் விராட் கோலியின் தாடியை அளவு எடுக்கின்றனர், பின்பு வித விதமாக ஃபோட்டோவும் எடுக்கின்றனர். அதனைத் தொடர்ந்து கோலியிடம் சில கையெழுத்து வாங்குகின்றனர். எதற்காக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து விராட் கோலி எந்த ஒரு தகவலையும் பகிரவில்லை.
இந்நிலையில், அதே வீடியோவை வெளியிட்ட கே.எல்.ராகுல், உங்களுக்கு தாடி மீது அதீத ஆசை என தெரியும். ஆனால் இந்த வீடியோவை பார்க்கும்போது, இன்சூர் செய்யும் அளவுக்கு தாடி மீது அவ்வளவு பிரியமா என ட்வீட் தட்டி இருக்கிறார். அட தாடியை இன்சூரே செய்யும் அளவுக்கு கோலி சென்று விட்டாரா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
