கொல்கத்தா: மும்பை அணிக்கு எதிரான தோல்விக்காக துவக்க வீரராக களமிறங்கும் சுனில் நரைனை மாற்ற அவசியமில்லை என கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் பவுல்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த 54வது லீக் போட்டியில், மும்பை,கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை அணி, கொல்கத்தா அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சொந்த மண்ணில், வெற்றிக்கு அருகில் இருந்து தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணி, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. எப்போதும் துவக்க வீரராக களமிறங்கி, எதிரணி பவுலர்களை தெறிக்கவிடும் சுனில் நரைன் மும்பை அணிக்கு எதிராக மண்ணை கவ்வினார். இதனால் அடுத்த போட்டியில் நரைன் துவக்க வீரராக களமிறங்க கூடாது என்ற கருத்து நிலவுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் பவுல்ட் கூறுகையில்,’சுனில் நரைன் துவக்க வீரராக இத்தொடரின் ஒரு உக்தி. அதை ஒரு தோல்விக்காக மாற்ற வேண்டிய அவசியமில்லை. அதனால் அடுத்த போட்டியிலும் நரைன் தான் துவக்க வீரர். அப்போது தான் எதிரணிக்கு சுலபமாக நெருக்கடி கொடுக்க முடியும். பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட் நரைன் தான். ‘ என்றார்.