திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது ஆஸ்கர் விருது. இது திரைப்படங்களின் பல்வேறு பிரிவுகளுக்கு விருது வழங்கப்படுவதாகும். ஆனால் முக்கிய விருகள் மட்டுமே அதிக அளவில் மீடியாக்களில் இடம்பெறும். மீடியாக்களில் வராத பல விருதுகள் உள்ளன. அவற்றில் ஒன்று ஆஸ்கர் விருதின் ஒரு பகுதியான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு விருது. இதனை தி அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சிறந்த 18 டெக்னீஷியன்களுக்கு விருது அறிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் கிரண் பட்.

இவர் கோவை சாய்பாபா காலணியை சேர்ந்தவர். பிளஸ் 2 வரை கோவையில் படித்தவர் அதன் பிறகு உயர்படிப்புக்காக அமெரிக்கா சென்று விட்டார். அங்கு படிப்பை முடித்து விட்டு 2004ம் ஆண்டு முதல் ஹாலிவுட் படங்களில் கிராபிக்ஸ் கலைஞரான பணியாற்றி வருகிறார். சமீபத்தில் வெளியான அசென்ஜர்ஸ், பைரேட்ஸ் ஆஃப் கரீபியன், ஸ்டார் வார்ட்ஸ் 7 படங்களில் பணியாற்றி உள்ளார். தற்போது அவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இந்த தகவலை கிரண் பட்டின் தந்தை சீனிவாஸ் பட் கோவையில் நேற்று தெரிவித்தார். மகன் விருது பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், ஏற்கெனவே இரண்டு முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு விருது கைநழுவிப்போனது, இந்த முறை கிடைத்துள்ளது என்றார்.