ஒட்டுற மண்ணெல்லாம் கூட வெட்டுன தங்கமா இருந்தா… அதுதான் அதிர்ஷ்டம்னு சொல்லுது ஆரோஸ்கோப்! கீர்த்தி சுரேஷுக்கும் அப்படியொரு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்ட ஆரம்பித்திருக்கிறது. அவரது முதல் படமான ரஜினி முருகன், இழுத்துக்கோ பறிச்சிக்கோ என்று ஏராளமான இழுபறிக்கு பின் ரிலீஸ் ஆகியிருந்தாலும், பம்பர் ஹிட்டானதால், பட்டொளி வீசி பறக்க ஆரம்பித்துவிட்டது கீர்த்திசுரேஷின் மார்க்கெட். மீண்டும் சிவகார்த்திகேயனுடன் அவர் ஜோடி சேர்ந்த ரெமோவின் ஹிட்டுதான் ஊருக்கே தெரிஞ்ச பிரியாணி படையல் ஆச்சே?

இந்த நிலையில்தான் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கு ஹீரோயின் வேட்டையை துவங்கினார்கள். படத்தில் நயன்தாரா வேண்டாம் என்று சூர்யா முன்பே கூறிவிட்டதால், அதிகம் வற்புறுத்தாமல் அடுத்த ஹீரோயினுக்கு வலை வீசினார் விக்னேஷ்சிவன். காஜலில் ஆரம்பித்து, ஹன்சிகா வரைக்கும் பலத்த போட்டி. நடுவில் சமந்தா கூட ஒருமுறை போனில் வந்து ஹி..ஹி… என்று சிரித்துவிட்டு போனார்.

ஆனால் போட்டிக்கே வராமலிருந்த கீர்த்தி சுரேஷை தேடிப்போய் கமிட் பண்ணிவிட்டார்களாம் இப்போது. எல்லாம் ரெமோ படத்தின் ஹிட்டுதான் காரணம்.

இன்னும் கொஞ்ச காலத்திற்கு கீர்த்தி சுரேஷின் நிழலுக்குக் கூட வெள்ளை பெயின்ட் அடித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் சினிமாவுலகம்!