ஆடுகளம், குட்டிப்புலி, தகராறு, விசாரணை, ஈட்டி, அஞ்சல உள்பட பல படங்களில் காமெடியனாக நடித்தவர் ஆடுகளம் முருகதாஸ். தற்போது திரைக்கு வந்துள்ள கடம்பன் படத்தில் ஆர்யாவின் நண்பனாக காமெடி ரோலில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் தனது நடிப்பைப்பார்த்து நண்பர்கள் பாராட்டி வருவதாக சொல்லும் ஆடுகளம் முருகதாஸ், சில படங்களும் புதிதாக புக்காகியிருப்பதாக சொகிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கடம்பன் படத்திற்காக அனைவருமே கடினமாக உழைத்தோம். முக்கியமாக, ஆளே போக முடியாத காட்டுக்குள் சென்று நடித்தோம். சிறுத்தை, யானைகள் இருக்கிற இடங்களுக்கே போய் படப்பிடிப்பு நடத்தினார் டைரக்டர் ராகவா. பாங்காங் காடுகளில் யானைகளுடன் நடித்ததெல்லாம் நல்லதொரு அனுபவமாக அமைந்தது. ஆர்யா ஒரு பேண்டஸியான ஆக்டர். ஆனால் தனது உடலை வருத்தி உழைத்துள்ளார். அவருடன் இணைந்து நடித்தது ரொம்ப மகிழ்ச்சி. இந்த படத்தின் மூலம் ஆர்யா எனது பங்காளியாகி விட்டார். எப்போது பார்த்தாலும் என்ன பங்காளி எப்படி இருக்கீங்க? என்றுதான் கேட்பார். நல்ல அற்புதமான நண்பர்.

மேலும், அடுத்தடுத்த ஆர்யா படங்களிலும் நான் கண்டிப்பாக நடிப்பேன். இந்த கடம்பன் என்னை அடுத்த லெவலுக்கு கொண்டு போயுள்ளது. தற்போது அருள்நிதி, நிவின்பாலி படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். கடம்பனை பார்த்து விட்டு பல டைரக்டர்கள் காமெடி வேடத்துக்காக என்னை தொடர்பு கொண்டு வருகின்றனர். அப்படி என்னை புதிய படங்களுக்காக தொடர்பு கொள்ளும் டைரக்டர்கள், காமெடி மட்டுமின்றி நான் எமோசனலாக நடித்திருப்ப தையும் சுட்டிக்காட்டி பாராட்டுகிறார்கள். அது சந்தோசமாக உள்ளது என்கிறார் ஆடுகளம் முருகதாஸ்.