தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், பீட்டா அமைப்புக்கு ஆதரவாகவும் கருத்து கூறும் நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாது என, நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்போவதாக கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை அறிவித்திருந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார், ஜல்லிக்கட்டு நடைபெறவிடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், மராட்டியம் மராட்டியனுக்கே என்று கூறிய பால் தாக்கரேவை இந்த அரசு ஒன்றும் செய்யாதபோது, தமிழ்நாடு தமிழனுக்கே என்று உரைக்க எவ்வளவு நேரம் ஆகும் என கேள்வியெழுப்பினார். மேலும் தமிழர்களின் உணர்வுக்கு எதிராக செயல்படும் மற்றும் பீட்டா அமைப்புக்கு ஆதரவாகவும் கருத்து கூறும் நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.