தனக்கு ஓட்டுப்போடாதவர்களுக்கு தன்னை கேள்வி கேட்க உரிமையில்லை என நடிகர் கருணாஸ் பேசியுள்ளார். அவரின் இந்த எகத்தாளப் பேச்சு வாக்காளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா தரப்பு ஆதரவு எம்எல்ஏவான கருணாஸ் சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாக சென்னை கமிஷனர் ஆபிஸில் புகார் அளித்தார். பின்னார் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது திருவாடனை தொகுதியில் தனக்கு எதிராக 2 லட்சம் பேர் உள்ளதாக கூறினார். அதில் தனக்கு ஓட்டு போட்டவர்கள் 75000 பேர்தான் என்றும் தனக்கு ஓட்டு போடாதவர்களுக்கு தன்னை கேள்வி கேட்க உரிமையில்லை என்றும் கருணாஸ் தெரிவித்தார். தான் தைரியமாக எதையும் நேரடியாக பேசுபவன், எனவே என்னைப்பற்றி அவதூறாக பரப்புவதை நம்ப வேண்டாம் என்றும் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே கருணாஸ் சசிகலா தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் திருவாடனை தொகுதி மக்கள் கொதிப்பில் உள்ளனர். இந்நிலையில் கருணாஸின் இந்த பேச்சு அவரது சொந்த தொகுதி மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த வாக்காளர்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கின் போது செல்பிக்கு போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் என்பது நினைவுகூறத்தக்கது.