மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று காரணமாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில், கருணாநிதி சேர்க்கப்பட்டு உள்ளார். மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட அவருக்கு கடந்த சில நாட்களாக ட்ரக்கியோஸ்டமி எனப்படும், செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின் அவரது உடல்நலம் முன்னேற்றம் அடைந்தது. அவர் நலமடைந்த போட்டோவை இரு தினங்களுக்கு முன்பாக மருத்துவமனை வெளியிட்டது. கருணாநிதி வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கருணாநிதியின் மகன் ஸ்டாலின், அவரது மகன் கனிமொழி ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைவர் கருணாநிதி பூரண குணமடைந்து விட்டதாக தெரிவித்தார். காவேரி மருத்துவமனையில் இருந்து இன்று மாலையில் வீடு திரும்புவார் என்றும் டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

கருணாநிதி இரு தினங்களுக்கு முன்பே குணமடைந்து விட்டார். புதன்கிழமை அஷ்டமி, வியாழக்கிழமை நவமி என்பதால் இரு தினங்கள் பூரண ஓய்வு எடுத்த கருணாநிதி இன்று மாலையில் வீடு திரும்புகிறார்.

கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வந்து நலம் விசாரித்து விட்டு சென்றனர். திமுக தொண்டர்கள் பூசணிக்காய் திருஷ்டி சுற்றி வேண்டிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.