சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அவரது பிறந்தநாளன்று தொண்டர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி, தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், வீடு திரும்பிய அவர், மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பிய போது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், அவர் தொலைகாட்சி பார்ப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது.

அதன்பின்னர், சில தினங்களில் வீடு திரும்பிய அவரது உடல்நிலையில், தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. எனினும், தீவிர அரசியலில் அவர் ஈடுபடாமலேயே இருந்தார். கருணாநிதி முன்பு போல் செயல்படும் நிலையில் இருந்தால், இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலை வேறு விதமாக இருந்திருக்கும் எனவும் கூறப்பட்டது. அத்தகைய சூழலில், திமுக பொருளாளராக இருந்த ஸ்டாலின், அக்கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்றார்.

அதிகம் படித்தவை:  திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகைகள்!

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அவரது பிறந்தநாளான வருகிற ஜூன் மாதம் 3-ம் தேதி, தொண்டர்களை அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாட்டின் மூத்த அரசியல்வாதியான கருணாநிதி, சட்டப்பேரவைக்குள் காலடி எடுத்துவைத்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த வைர விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளன்றே இந்த வைர விழா கொண்டாடப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

அதிகம் படித்தவை:  கும்பக்கோணம் தீவிபத்தின் போது அஜித் என்ன செய்தார் தெரியுமா?

கடந்த 1957-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவைக்கு முதல் முறையாக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை தான் போட்டியிட்ட அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 13 முறை சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமையை இந்தியாவில் தனக்கு மட்டுமே உரித்தாக்கிக் கொண்டவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.