Tamil Cinema News | சினிமா செய்திகள்
அறிமுக பாடல் இவர் தான் பாட வேண்டும். கறார் காட்டிய ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தின் அறிமுக பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூடன் இணைந்து இருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்திற்கு எதிராக வில்லன் வேடத்தை நடிகர் விஜய் சேதுபதி ஏற்று இருக்கிறார். இதுவே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. பாபி சிம்ஹாவும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால், ரஜினியின் நாயகி யார் என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் விடை தெரியவில்லை. அதற்கான பட்டியலில் ஏகப்பட்ட நடிகைகள் அலசப்பட்டு, இதுவரை யாரையுமே கார்த்திக் சுப்புராஜ் ஒப்பந்தம் செய்யவில்லை.
இருந்தும், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் இமயமலையில் அமைந்துள்ள டார்ஜிலிங் பகுதியில் தொடங்கி இருக்கிறது. அங்கு ஒரு கல்லூரியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதால், ரஜினி இப்படத்தில் பேராசிரியராக நடிக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. தொடர்ந்து, முதல்முறையாக படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இசையமைப்பு பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுவாக கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைப்பார். இந்த முறை முதல்முறையாக அனிருத்துடன், கார்த்திக் இணைந்து இருப்பதால் பாடலிலும் புதுமை காண முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், ரஜினிக்கான அறிமுக பாடலை இப்படத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியன் பாட இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரஜினியின் பல வெற்றி படங்களின் இண்ட்ரோ பாடல்களை பாலசுப்ரமணியன் தான் பாடுவார். அது படத்திற்கும் பெரிய வரவேற்பை பெற்று தரும். ஆனால், பாபா, கபாலி, காலா உள்ளிட்ட சில படங்களில் ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பி. பாடவில்லை. இப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சரிவைச் சந்தித்தன. இதனால், இப்படத்தில் எஸ்.பி.பியை பாட வைக்கலாம் என ரஜினிகாந்த் விரும்பியதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
