Tamil Cinema News | சினிமா செய்திகள்
கார்த்திக் சுப்புராஜ் -ரஜினிகாந்த் படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்
சூப்பர் ஸ்டார் ரஜினி திறமையான இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் மெட்ராஸ் இயக்குநர் பா.ரஞ்சித்துடன், கபாலி மற்றும் காலா என இரண்டு படங்களை அவர் முடித்து விட்டார். கபாலி விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியகவும் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், காலா படம் வரும் ஜூன் 7-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மும்பையில் வாழும் தமிழர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த படத்தை, நடிகர் தனுஷ் தயாரித்திருக்கிறார்.
அதேபோல், இயக்குநர் ஷங்கரின் 2.0 படத்தில் தனது போர்ஷனையும் ரஜினி முடித்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாகத் தயாரிக்கும் அந்த படத்துக்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான கார்த்திக் சுப்புராஜின் மௌனப்படமான மெர்க்குரி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. இதற்காக, திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் கார்த்திக் சுப்புராஜ் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார். இசையமைப்பாளர் தவிர படத்தின் மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்களை இறுதி செய்யும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது.
இந்தநிலையில், ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் ஒளிப்பதிவாளராக தேசிய விருதுபெற்ற திருநாவுக்கரசு என்கிற திரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி படத்தில் ஒளிப்பதிவாளராக இவர்தான் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான மகேஷ் அன்னே நேனு படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவாளர்.
சூர்யா நடித்த 24 படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது இவருக்குக் கிடைத்தது. இந்தநிலையில், ரஜினி படம் குறித்த தகவலை திரு, உறுதி செய்துள்ளார். ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், படம் குறித்தோ, திரைக்கதை குறித்தோ கார்த்திக் சுப்புராஜுடன் இதுவரை ஆலோசிக்கவில்லை. விரைவில் இதுகுறித்து ஆலோசிப்போம் என்றார். அதேபோல், சுந்தர்.சி இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாகும் சங்கமித்ரா படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவாளர்.
