சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார் பெரியபாண்டியன். நகைக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைதுசெய்ய ராஜஸ்தான் சென்ற தனிப்படையில் அவர் இருந்தார். கொள்ளையர்களைச் சுற்றி வளைக்கும்போது கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உயிரிழந்தார். அவரது மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது அவரது சொந்த ஊரில்.நள்ளிரவில் உடல் அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் தென்காசியில் ஷூட்டிங்கில்  இருந்த நடிகர் கார்த்தி, அங்கிருந்து  சாலை புதூருக்கு சென்று பெரிய பாண்டியனின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் மனைவியை சந்தித்து தன் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

கார்த்தி பிரபல நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் தொகுப்பு “உண்மை சம்பவமான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிக்கும் போதே எனக்கு  இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என்று மன அழுத்தமாக இருந்தது. தற்பொழுது   அது உண்மையாகவே ஒரு இன்ஸ்பெக்டருக்கு நடந்துள்ளது எனக்கு வருத்தத்தை தந்துள்ளது.

பெரியபாண்டியன் மிகவும் நல்ல மனிதர். அவர் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த 15 சென்ட் இடத்தை அந்து ஊரில் பள்ளிக்கூடம் கட்ட கொடுத்துள்ளார். அவர் கூலி வேலை செய்து வாழ்ந்த ஒரு தாயின் மகன் என்பதால் எப்போதும் தன்னை போல் கஷ்டம் இல்லாமல் எல்லோரும் வாழவேண்டும் என்று நினைப்பவர்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அதே நல்ல எண்ணத்தில் தான் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் பகுதிக்கு சென்று வீர மரணம் அடைந்துள்ளார். அங்கு மக்கள் அனைவரும் அவருடைய இடத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி அவருடைய பெயர் வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

நமது அரசாங்கம் கண்டிப்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் நிறைய உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும். ஈரம் காயாத அவருடைய சமாதியில் நிற்கும் பொழுது நெஞ்சம் பதை பதைத்துவிட்டது. அவருடைய ஆன்மா சாந்தியடையவும், அவரின் குடும்பத்தாருக்காகவும்  பிரார்த்தனை செய்கிறேன்.” என்று கூறியுள்ளார்.