பிரபல நடிகர் கார்த்தி, சமீபத்தில் ‘காஷ்மோரா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, மணிரத்னம் இயக்கி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் காஷ்மீர் செல்லவுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் கார்த்தி பைலட் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஆனால் யாருக்கும் தெரியாத ஒரு தகவல் கார்த்தி இந்த படத்தில் மீசையில்லாத புது கெட்டப்பில் தோன்றுகிறார் என்பதுதான். படப்பிடிப்பு முடிந்தவுடன் ஒட்டுமீசையுடன் வலம் வந்த கார்த்தியின், மீசையில்லாத ஸ்டில் ஒன்று சற்று முன்னர் இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது. கார்த்தியின் இந்த வித்தியாசமான தோற்றம் கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கார்த்தி, அதிதி ராவ் ஹைத்ரி, ஷராதா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.