“என்னா சித்தப்பு…?” என்று இப்போதும் அந்த ஒரு டயலாக்தான் கார்த்தியின் தேசிய கீதமாக இருக்கிறது. அவர் இந்த டயலாக்கை உச்சரிக்கும் போதெல்லாம், அவரது ரசிகர்கள் விண்ணதிர விசில் அடிப்பார்கள். இப்படியொரு டயலாக்கை அவருக்கு தந்து அவரது புகழை நிலையாக்கி வைத்த சிறப்பு அமீருக்கு மட்டுமே உண்டு. பருத்தி வீரன் படம் வந்து பத்து வருஷங்கள் ஆகிவிட்டது.

சூர்யா மீதிருந்த கோபத்தில் அவரது தம்பி கார்த்தியை ஹீரோவாக்கினார் அமீர். இந்த படத்தில் கமிட் ஆவதற்கு முன் கார்த்தியின் தோற்றத்தை பார்த்தவர்களுக்கு தெரியும். அமீர் கார்த்தியை எப்படி பட்டி பார்த்து தட்டி தட்டி உருவாக்கியிருக்கிறார் என்பது. அவ்வளவு தொந்தியும் தொப்பையுமாக இருப்பார் கார்த்தி. இவர்தான் சூர்யாவுக்கு தம்பி என்றால் ஒரு பயல் நம்பியிருக்க மாட்டான். ஆனால் அவரை சுருக்கி சுண்ணாம்பாக்கி ஒளி படைக்க வைத்த குருநாதர் அமீருக்கு கார்த்தி செய்த நன்றிக்கடன் என்ன?

சில தினங்களுக்கு முன் பருத்திவீரன் பத்தாவது வருடம் பிறந்ததையொட்டி ஒரு நன்றிக்கடிதம் எழுதியிருக்கிறார் கார்த்தி. அதில் படத்தில் பங்குபெற்ற அத்தனை பேருக்கும் தனித்தனியாக நன்றி சொன்ன கார்த்தி, ரொம்ப ஞாபகமாக அமீரின் பெயரை மறந்தார். ஒரு வரி கூட அவரைப்பற்றி எழுதவில்லை.

இந்த கடிதத்தை படித்த அமீர் ஒரு சின்ன நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்துவிட்டார். ஆனால் ஊர் உலகம் அப்படியா இருக்கும்? கடந்த இரண்டு நாட்களாக கோடம்பாக்கத்தில் அதிகம் மெல்லப்பட்டு வருகிறார் கார்த்தி.

நன்றி பெரிய வார்த்தை. அதை கூட்டல் கழித்தல் கணக்காக மாற்றுவதற்கு யாருக்கும் உரிமையில்லை.