
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக சர்தார் என்ற படம் வெளியாகப் போவதை மோஷன் போஸ்டருடன் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து அந்த லுக் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுவரை இல்லாத கெட்டப்பில் வயதான தோற்றத்தில் கார்த்தி நடிக்க இருப்பதால் முதல் பார்வை வெளியானபோதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகி விட்டது. இந்நிலையில் கார்த்தியின் கதாப்பாத்திரம் என்னவாக இருக்கும் ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
இரும்புத்திரை என்ற வெற்றி படத்தை கொடுத்த பிஎஸ் மித்ரன் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என்ற தோல்விப் படத்தை கொடுத்தார். இதனால் அடுத்த பட வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் கோலிவுட்டில் எழுந்தன.
ஆனால் பிஎஸ் மித்ரன் கார்த்தி கூட்டணியில் விரைவில் ஒரு படம் உருவாக உள்ளது என்ற செய்தி நீண்ட நாட்களாக தொடர்ந்து கோலிவுட் வட்டாரங்களில் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த படத்தில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடிப்பது உறுதியாகியுள்ளது.
அதில் ஒன்று போலீஸ் வேடம், மற்றொன்று வில்லன் வேடம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அதில் வில்லன் கதாபாத்திரம் தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வந்த வயதான தோற்றமாம். ஜெயிலில் இருந்து கொண்டே வெளியில் பல கொலைகளுக்கு தரமாக திட்டம் போட்டுக் கொடுக்கும் கதாபாத்திரமாம். இது இணையத்தில் வெளிவந்த தகவல் தானே தவிர படக்குழுவினர் இதுபற்றி எந்த ஒரு விஷயத்தையும் வெளியிடவில்லை.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் சர்தார் படத்தை எப்படியாவது வெற்றி படமாக கொடுத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
