கார்த்தியின் அத்தான் பாசம் ஜெயித்ததா.? மெய்யழகன் எப்படி இருக்கு, மெய்யான விமர்சனம்

Meiyazhagan Movie Review:96 புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி கூட்டணியில் உருவாகி இருக்கும் மெய்யழகன் நாளை திரைக்கு வருகிறது. ஆனால் அதற்கு முன்பே பத்திரிக்கையாளர்களுக்கு படம் திரையிடப்பட்டுள்ளது.

படத்தைப் பார்த்த விமர்சகர்களும் தற்போது தங்களுடைய விமர்சனத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். யார் என்று தெரியாதவரிடமிருந்து கிடைக்கும் அன்புதான் படத்தின் ஒன் லைன். இதன் விரிவான விமர்சனத்தை இங்கு காண்போம்.

கதை கரு

20 வருடங்களுக்கு முன்பு சொத்து பிரச்சனையின் காரணமாக சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வருகிறார் அரவிந்த்சாமி. அதன் பிறகு தங்கையின் திருமணத்திற்காக மீண்டும் ஊருக்கு வருகிறார். அங்கு அத்தான் என பாசத்தோடு அழைத்து அறிமுகம் ஆகிறார் கார்த்தி.

ஆனால் அரவிந்த் சாமிக்கு அவர் யார் என்று தெரியவில்லை. இருந்தாலும் அதை வெளிக்காட்டி கார்த்தியை காயப்படுத்த விரும்பாமல் தெரிந்தவர் போல் பேசி பழகுகிறார். அந்த அன்பால் அவர் சென்னைக்கு போகும் பஸ்ஸை தவற விடுகிறார்.

அதன் பிறகு இரவு முழுவதும் அவர் கார்த்தியின் பெயர் கூட தெரியாமல் அரட்டை, பாட்டு, டான்ஸ் என கழிக்கிறார். இறுதியில் கார்த்திக்கும் அவருக்கும் என்ன உறவு? கார்த்தியின் பெயர் தெரிந்ததா? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது மெய்யழகன்.

படம் எப்படி இருக்கு.?

எதிர்பார்ப்பு இல்லாத அன்பு கிடைப்பது மிகப்பெரும் வரம். சுயநலம் நிறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் கலப்படமில்லாத அன்பை ஒருவர் கொடுப்பதே ஆச்சரியம் தான். அதைத்தான் இயக்குனர் மூன்று மணி நேர படமாக கொடுத்திருக்கிறார்.

அதற்கு கார்த்தியின் நடிப்பு கூடுதல் பலமாக இருக்கிறது. சிரித்த முகத்துடன் அத்தான் அத்தான் என சுற்றி வரும் அவர் தன் துறுதுறு நடிப்பிலும் கவர்கிறார். அதேபோல் அக்மார்க் கிராமத்து இளைஞராக இந்த படத்திலும் தன்னை நிரூபித்திருக்கிறார்.

அடுத்ததாக அரவிந்த்சாமி மைக்கேல் ஜாக்சன் டான்ஸ், கார்த்தியை யார் என்று தெரியாமல் கலங்குவது என ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இந்த இரண்டு கேரக்டர்கள் தான் படம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. இதுவே பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது.

ராஜ்கிரன், இளவரசு, ஸ்ரீதிவ்யா ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருந்தாலும் காட்சிகள் என்னவோ குறைவுதான். அதேபோல் படத்தின் நீளமும் அன்பு மட்டுமே முக்கியம் என வரும் வசனங்களும் கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது.

இதுதான் கதை கரு என படம் ஆரம்பிக்கும் போதே தெரிந்து விடுகிறது. ஆனால் அந்த அன்பை இவ்வளவு நீளமாக சொல்லி இருக்க வேண்டாம் என தோன்றுகிறது. மேலும் தூத்துக்குடி சம்பவம், ஜல்லிக்கட்டு என கார்த்தி திடீரென பேசும் வசனங்களும் சோதிக்கிறது. இருந்தாலும் கள்ளம் கபடம் இல்லாத அன்பிற்காக இந்த மெய்யழகனை தாராளமாக பார்க்கலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3.25/5

கலங்கமில்லாத அன்பை காட்டும் மெய்யழகன்

- Advertisement -spot_img

Trending News