திகில் படங்களில் காமெடி கலந்து வெற்றி பெறலாம் என்ற சூத்திரத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். இவர் ஆரம்பித்து வைத்த வழியில்தான் தற்போது மாதத்திற்கு நான்கு பேய் படங்கள் வெளிவந்து ரசிகர்களை டார்ச்சர் செய்கின்றன.
காஞ்சனா:

2007ம் ஆண்டு சரண் தயாரிப்பில் ராகவா லாரான்ஸ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற பேய்ப்படம் முனி. இதன் இரண்டாம் பாகமான காஞ்சனா சரத்குமாரின் வித்யாசமான தோற்றத்தில் 2011ம் ஆண்டு வெளிவந்தது.
அந்த படமும் நல்ல வசூலை குவிக்க தொடர்ந்து அதே களத்தை ராகவா லாரன்ஸ் தேர்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக 2015ம் ஆண்டு காஞ்சனா இரண்டாம் பாகம் வெளிவந்து வெற்றி பெற்றது. இப்படத்தில் முதலில் அஞ்சலி நடிக்கவிருந்தது, ஆனால் இறுதியாக நித்யா மேனன் அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

இப்படி வரிசையாக தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த லாரன்ஸ் தற்போது காஞ்சனாவின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் முழுக்க முழுக்க திகில் மற்றும் நகைச்சுவை களத்தை கொண்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
காஞ்சனா 3:
முனி படத்திலிருந்து தொடர்ந்து வரும் வேதிகா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி கதாபாத்திரங்கள் தற்போது உருவாகி வரும் காஞ்சனா மூன்றாம் பாகத்திலும் அதே பாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் ஓவியா, மனோபாலா போன்றோர் நடிக்கின்றனர். இவர்கள் தவிர நிக்கி டம்போலி என்னும் புது நடிகையும் நடிக்க உள்ளாராம்.
ஓவியா விலகல் சர்ச்சை:
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஓவியா. இவர் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளாகட்டும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளாகட்டும் ஓவியா வந்தாளே அங்கு ஆரவாரம்தான் என்று சொல்லுமளவிற்கு தனது மார்கெட்டை தூக்கிப்பிடித்திருக்கிறார்.

இவர் தற்போது காஞ்சனா மூன்றாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார், ஆனால் ஆரம்பம் முதல் கால்ஷீட் குளறுபடி, சம்பள பிரச்சனை போன்றவற்றால் ஓவியா இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. ஆனால் காஞ்சனா படக்குழு இதனை மறுக்கும் விதமாக லாரன்ஸ் மற்றும் ஓவியா சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். ஓவியா படத்திலிருந்து விலகவில்லை, சர்ச்சைகளை நம்ப வேண்டாம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த படத்தில் நீங்கள் இதுவரை கற்பனை செய்துகூட பார்த்திராத ஒவியாவினை பார்க்க உள்ளீர்கள் என்று ராகவா லாரன்ஸ் சொல்லியுள்ளார், அது அவரது கதாபாத்திரமா அல்லது மேக்கப்பா என்று சரியாக தெரியவில்லை. எது எப்படியோ ஓவியா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஓவியா ஆர்மியினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.