தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. முழுவதுமாக பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த கங்கனா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தலைவி என்ற தமிழ் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரீ கொடுத்தார்.
இயக்குனர் விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படமாக உருவாகி இருந்த தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தை கங்கனா ஏற்று நடித்திருந்தார். பிரம்மாண்டமாக உருவான இப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. மேலும் வசூல் ரீதியாக தோல்வியையே சந்தித்துள்ளது.
இந்நிலையில் கங்கனா ரனாவத் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு ஒன்றை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி தலைவி படத்தைத் தொடர்ந்து சீதா என்ற வரலாற்று படத்தில் சீதா தேவியாக கங்கனா நடிக்க உள்ளாராம். அலாகிக் தேசாய் இயக்க உள்ள இப்படத்திற்கு பாகுபலி, தலைவி ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார்.
முன்னதாக இப்படத்தில் சீதா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை கரீனா கபூர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் அவர் 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால் இந்த வாய்ப்பு கங்கனாவிற்கு கிடைத்துள்ளதாம். மேலும் இப்படத்தில் கங்கனா நடிக்க உள்ளார் என்பதை படக்குழுவினர்களும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
சமீபகாலமாகவே தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் கங்கனாவிற்கு சீதா படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.