Tamil Cinema News | சினிமா செய்திகள்
தொழிலதிபர் கடத்தல்! பெட்ரோல் தீர்ந்ததால் விட்டு ஓடிய கொள்ளையர்கள்! போலீஸ் சுற்றிவளைப்பு
காஞ்சிபுரத்தில் காஞ்சி சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் அப்துல் ரகுமான் இவர் நேற்றிரவு கடையை மூடி விட்டு இருசக்கர வாகனத்தில் ஓரிக்கை பகுதியில் திருவேங்கட நகரில் உள்ள தன் வீட்டுக்குச் சென்றுள்ளார். செல்லும் பொழுது அவரை பின்தொடர்ந்து ஓர் ஆம்னி கார் வந்துள்ளது. காஞ்சிபுரம் நகர்ப் பகுதியில் உள்ள காந்தி சாலையில் பசூல் ரகுமான் சென்றுகொண்டிருந்தபோது, அந்த ஆம்னி வாகனம் அவர்மீது மோதியது. கீழே விழுந்த பசூல் ரகுமானை உடனடியாக காரின் உள்ளே திணித்துக்கொண்டு, அந்த கார் அதிவேகமாகச் சென்றுவிட்டது.

rahman
இதனைதொடர்ந்து, பசூல் ரகுமான் கடத்தப்பட்ட விவரத்தை அவருடைய மகன் ஜெயாருதீன் என்பவருக்குக் கடத்தல்காரர்கள் தொலைபேசிமூலம் தகவல் தெரிவித்தனர். ‘50 லட்ச ரூபாய் வேண்டும்’ என மிரட்டப்பட்டதால் பதறிப்போன ஜெயாருதீன், காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம் தகவலைத் தெரிவித்தார்.
அடுத்த முறை பேசும்போது, உடனே துண்டிக்காமல், கொஞ்ச நேரம் பேசுமாறு எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி அறிவுறுத்தினார். அதேபோல ஜெயாருதீன் கடத்தல்காரர்களிடம் பேச, அவர்களின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, காவலர்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர்.
காவல் துறையினர் தங்களை ட்ராக் செய்வதை உணர்ந்த கடத்தல்காரர்கள், கிராம சாலைகள் வழியாகவே பயணித்துக்கொண்டிருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் கடத்தல்காரர்களைப் பிடிக்க காவல்துறையினர் காத்திருந்தனர். காவல் துறையினர் சுற்றிவளைத்ததை உணர்ந்த கடத்தல்காரர்கள், தங்களது வாகனத்தில் பெட்ரோல் குறைவாக இருந்த காரணத்தால், பசூல் ரகுமானை வயல்வெளிகள் நிறைந்த இருள் பகுதியில் இறக்கி விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பசூல் ரகுமான் மீட்கப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த மாதிரி செயல்கள் திரும்ப தொடராமல் இருக்க காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏதேனும் செய்ய வேண்டும்.
