‘விஸ்வரூபம் 2’ படத்தின் பணிகள் தாமதமாவதற்கு தயாரிப்பாளர் ரவிச்சந்திரனே காரணம் என்று கமல் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

‘விஸ்வரூபம்’ வெளியான உடனே, ‘விஸ்வரூபம் 2’ படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

‘விஸ்வரூபம் 2’ படத்திற்கான பணிகளை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தாமதப்படுத்தியதால், ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ ஆகிய படங்களில் தொடர்ச்சியாக கமல் நடித்து வந்தார். ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’, ‘தூங்காவனம்’ என கமல் நடிப்பில் உருவான படங்கள் வெளியாகிவிட்டன. ஆனால் ‘விஸ்வரூபம் 2’ வெளியீடு எப்போது என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், ‘விஸ்வரூபம் 2’ படத்தில் நிலவி வரும் சிக்கல் குறித்து கமல், “இன்னும் ஆறு மாதம் இறுதிகட்ட பணிகள் மீதம் இருக்கின்றன. ஒரு படத்தின் இசை வெளியீட்டுக்காக அர்னால்டை அழைத்து வருவதில் எனது தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவி பிஸியாக இருந்தார். அதைவிட மற்ற சில படங்களின் விநியோக உரிமையை வாங்குவதில் இன்னும் பிஸியாக இருந்தார். அவர் பாக்கி பணத்தை கொடுக்கும் வரை ஒப்பந்தத்தின்படி படம் என்னுடையதுதான்.

மேலும் வேலை நடக்க நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டும். இந்நிலையில், நானல்ல, யாராக இருந்தாலும் ஒரு படம் வெளியாக விட முடியாது. படக்குழுவுக்கு அவ்வளவு பணம் பாக்கி வைத்துள்ளார். நான் எனது சம்பளத்தை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் இந்த கொள்கை படத்தைச் சேர்ந்த மற்ற கலைஞர்களை பாதிக்க விடக்கூடாது.

சம்பளத்தைக் கொடுக்காமல் வைத்திருப்பது துரதிர்ஷ்டமானது என்பதோடு தனது சாத்தியப்பாடுகளை வெளிப்படுத்தி ஒரு படம் அடையக்கூடிய வெற்றியையும் தடுத்து நிறுத்தும் பாவச் செயலாகவும் ஆகிவிடும்” என்று பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை கடுமையாக சாடியிருந்தார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், “’விஸ்வரூபம் 2’ எதிர்பார்க்கும் எல்லாருக்கும். நான் பிரச்சினைகளைத் தீர்க்க தனிப்பட்ட முறையில் களமிறங்கியுள்ளேன. பெரிய தடைகள் எல்லாம் விலகிவிட்டன. மீதமிருப்பது தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியான தடைகளே” என்று தெரிவித்துள்ளார் கமல்.