சபாஷ் நாயுடு படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், கிடப்பில் உள்ள தனது விஸ்வரூபம் 2-ம் பாகத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார் கமல் ஹாஸன்.

தமிழக அரசியல் குறித்து பரபரப்பாக கருத்து தெரிவித்து வரும் கமல் ஹாஸன், சினிமாவில் பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்.

அவரது உத்தம வில்லன், தூங்கா வனம் படங்கள் சுமாராகத்தான் போயின. விஸ்வரூபம் 2 படம் கிட்டத்தட்ட நான்காண்டுகளாக கிடப்பில் உள்ளது. கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சபாஷ் நாயுடு படம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி நிற்கிறது.

அந்தப் படத்தை இயக்கவிருந்த ராஜீவ் குமார் மோசமான காய்ச்சலில் படுத்த படுக்கையானார். வீட்டில் தவறி விழுந்த கமல் ஹாஸனுக்கு கால் உடைந்தது. படத்தின் காஸ்ட்யூமர் கவுதமி பிரிந்து போனார். அத்தோடு படம் முடங்கி நிற்கிறது.

மேலும் அமெரிக்காவில் எடுக்கப்பட வேண்டிய ஷூட்டிங் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள விசா நடவடிக்கையால் விசா கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் உள்ளிட்டோரின் தேதிகள் கிடைக்கவில்லை. எனவே இன்னும் மூன்று மாதம் வரை படப்பிடிப்பைத் தொடங்க முடியாத நிலை.

எனவே ஏற்கெனவே கிடப்பிலுள்ள விஸ்வரூபம் 2 படத்தை தூசி தட்டத் தொடங்கியுள்ளார் கமல்.

இதுகுறித்த ஒரு தகவலை கமல் ஹாசன் சமீபத்தில் அறிவித்துள்ளார். அதில் விஸ்வரூபம் 2 படத்தின் தடையாக இருந்த முக்கிய பிரச்சனைகள் நீங்கிவிட்டதாகவும், தொழிநுட்ப மற்றும் சட்டரீதியான சவால்களை மட்டுமே சமாளிக்க வேண்டி உள்ளது. எனவே படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் விரைவில் துவங்கி 6 மாதத்தில் படம் திரைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.