பஞ்ச் டயலாக் எல்லாம் சினிமாவில் மட்டும் தானா.. வசூல் வேட்டையால் மௌனம் சாதிக்கும் கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள விக்ரம் திரைப்படம் இன்னும் சில நாட்களில் உலக அளவில் வெளியாக இருக்கிறது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் வெளியிட இருக்கும் இந்த திரைப்படம் வரும் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதிகாலை 4 மணிக்கு தொடங்க இருக்கும் விக்ரம் படத்தின் முதல் காட்சியை காண கமலின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இதற்காக சில நாட்களுக்கு முன்பே விக்ரம் பட டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டது. ரிசர்வேஷன் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அத்தனை டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது. அதற்கு அடுத்தடுத்த காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் முடிவடைந்த நிலையில் படத்தின் வியாபாரம் அமோகமாக சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்திற்கான டிக்கெட் அநியாய விலைக்கு விற்கப்படுவதாக ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர். அதாவது நான்கு மணி காட்சிக்கான டிக்கெட் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல் 7 மணிக்கு தொடங்கப்படும் காட்சிக்கான டிக்கெட் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

சில வருடங்களாகவே தமிழக அரசு அநியாய கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களை கண்டித்து வருகிறது. அதனால் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலேயே டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வந்தது. ஆனால் வலிமை, பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் வெளியானபோது டிக்கெட் விலை எக்கச்சக்கமாக எகிறியது.

ஒரு டிக்கெட்டின் விலை 500, 1000 என்று அதிகபட்சமாக விற்கப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் தியேட்டர் உரிமையாளர்கள் ரசிகர் மன்றங்களுக்கு மட்டும் கம்மியான விலையில் டிக்கெட்டுகளை கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்கு அதிகபட்ச கட்டணத்தை வசூலித்தனர்.

அதே போன்ற நிலைமைதான் தற்போது விக்ரம் திரைப்படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. சினிமாவில் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஹீரோக்கள் நிஜ வாழ்வில் இதுபோன்ற அநியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்காமல் அமைதியாக இருந்து விடுகின்றனர்.

மேலும் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் கமல் ஹாசன் இந்த அநியாய கட்டணத்திற்கு எதிராக எந்தவித குரலும் கொடுக்காமல் மவுனம் சாதித்து வருகிறார். ஏற்கனவே திமுக கட்சிக்கு எதிராக இருக்கும் கமல், உதயநிதி ஸ்டாலினுக்கு விக்ரம் படத்தை விற்கும் போதே கடும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் இந்த அதிக கட்டண வசூலை பார்த்தும் கமல் அமைதியாக இருப்பது மற்றொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்